கலைஞர் பெயர் சூட்ட அரசுக்கு கருத்துரு


கலைஞர் பெயர் சூட்ட அரசுக்கு கருத்துரு
x
தினத்தந்தி 11 April 2022 10:23 PM IST (Updated: 11 April 2022 10:23 PM IST)
t-max-icont-min-icon

கலைஞர் பெயர் சூட்ட அரசுக்கு கருத்துரு

உடுமலை
உடுமலை தளிசாலையில் உள்ள மேம்பாலத்திற்கு “கலைஞர் மேம்பாலம்”என்று பெயர் சூட்டுவதற்கு, அரசுக்கு கருத்துரு அனுப்பி செயல்படுத்துவது என்று நகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
நகராட்சி கூட்டம்
 நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடந்துமுடிந்தபிறகு உடுமலை நகராட்சியில் முதல் நகர்மன்ற கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு நகராட்சி தலைவர் மு.மத்தீன் தலைமை தாங்கி பேசினார். கூட்டத்தில் துணைத்தலைவர் கலைராஜன், கவுன்சிலர்கள் வேலுச்சாமி, ஆசாத்,மு.ஜெயக்குமார், ரம்யா, ரம்லா,ராம்தாஸ், ரீகன், அர்ஜுனன் உள்பட பல கவுன்சிலர்கள் பேசினர்.
கலைஞர் மேம்பாலம்
கூட்டத்தில் உடுமலை-தளிசாலை மேம்பாலத்திற்கு "கலைஞர் மேம்பாலம்" என்றும், தங்கம்மாள் ஓடை வீதிக்கு தளபதி மு.க.ஸ்டாலின் சாலை என்றும், தாஜ் பை-பாஸ் சாலைக்கு 1969-ம் ஆண்டு நகராட்சியில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின்படி புனிதர் எஸ்.ஜே.சாதிக் சாலை என்றும் பெயர் சூட்டுவதற்கு அரசுக்கு கருத்துரு அனுப்பி செயல்படுத்துவது.
சரித்திர புகழ் வாய்ந்த முன்னோர்களின் மொழியான, உலகத்தமிழ் செம்மொழியை போற்றும் வகையில் உடுமலை நகரில் புகழ்பெற்ற, "தாகூர் மாளிகை" (நகராட்சி பழைய அலுவலகம்) கட்டிடத்திற்கு முன்பகுதியில் செம்மொழி பூங்கா அமைப்பது. அதில் உடுமலை வரலாறுகளை எதிர்கால சந்ததியினர் தெரிந்து கொள்ளும் வகையில் பழைய அரிய புகைப்படங்கள், கல்வெட்டுக்கள், பழங்காலத்தில் புழக்கத்தில் இருந்த பொருட்கள் ஆகியவற்றை உள்ளடக்கிய அருங்காட்சியகம் அமைப்பது.பழைய கூட்ட அரங்கை நவீனப்படுத்தி கருத்தரங்குகள் நடத்துவதற்கு குறைந்த வாடகையில் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வழங்குவது. உடுமலை மாரியம்மன் கோவில் தேர் செல்லும், நகராட்சிக்கு சொந்தமான சாலைகளான வடக்கு குட்டை வீதி, சதாசிவம் வீதி, தங்கம்மாள் ஓடை வீதி ஆகிய சாலைகளை கான்கிரீட் சாலைகளாக தரம் உயர்த்துவது என்பது  உள்பட 6 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
அ.தி.மு.க.வெளிநடப்பு
இதுதவிர உடுமலை நகராட்சி பகுதியில் மழைநீர் வடிகால், தார்சாலை அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சிப்பணிகளை மேற்கொள்வது, வரியினங்களை உயர்த்துவது உள்ளிட்ட 102 தீர்மானங்கள் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டன. இந்த நகராட்சியில் உள்ள அ.தி.மு.க. கவுன்சிலர்கள் 4 பேரும், வீட்டுவரி குறித்த தீர்மானத்திற்கு ஆட்சேபனை தெரிவித்து நகராட்சி ஆணையாளரிடம் மனு கொடுத்தனர். 
முன்னதாக அ.தி.மு.க.கவுன்சிலர்கள் ரம்யா, ரம்லா ஆகியோர் பேசும்போது வரி உயர்வு தீர்மானத்திற்கு ஆட்சேபனை தெரிவித்து பேசினர். அதற்கு தி.மு.க.கவுன்சிலர்கள் வேலுச்சாமி, ஆசாத் உள்ளிட்டோர் பேசும்போது, வரியினங்களை உயர்த்தியதே அ.தி.மு.க. ஆட்சி இருந்த போது தான். அது அமல்படுத்தப்படாமலிருந்தது. அதுதான் இப்போது தீர்மானத்தில் கொண்டு வரப்பட்டுள்ளது என்றனர். 
இந்த நிலையில் வரி உயர்வு தீர்மானத்திற்கு ஆட்சேபனை தெரிவித்து அ.தி.மு.க. கவுன்சிலர்கள் 4 பேரும் வெளிநடப்பு செய்தனர். கவுன்சிலர்கள் கேட்ட கேள்விகளுக்கு நகராட்சி தலைவர் மத்தீன், ஆணையாளர் சத்தியநாதன் ஆகியோர் பதில் அளித்தனர்.
1 More update

Next Story