நிலத்தை அபகரித்தவர்கள் மீது நடவடிக்கை கோரி கலெக்டர் அலுவலகத்தில் குடும்பத்தினருடன் மூதாட்டி தர்ணா
நிலத்தை அபகரித்தவர்கள் மீது நடவடிக்கை கோரி கலெக்டர் அலுவலகத்தில் குடும்பத்தினருடன் மூதாட்டி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
விழுப்புரம்,
திண்டிவனம் கிடங்கல்-2 பகுதியை சேர்ந்த ராமலிங்கம் மனைவி பாப்பம்மாள் (வயது 96) என்ற உடல் ஊனமுற்ற மூதாட்டி நேற்று காலை தனது குடும்பத்தினருடன் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து அங்குள்ள நுழைவுவாயில் முன்பு திடீரென அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
உடனே அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் விரைந்து சென்று பாப்பம்மாளிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவர் கூறுகையில், நான் தமிழக அரசின் மூலம் மாதாந்திர உதவித்தொகையை பெற்று அதன் மூலம் வாழ்ந்து வருகிறேன்.
எனக்கு சொந்தமான இடத்ைத போலி ஆவணம் தயாரித்து. திண்டிவனம் கிடங்கல்-2 பகுதியை சேர்ந்த ஒருவரும், திண்டிவனம் ஜெயபுரம் பகுதியை சேர்ந்த ஒருவரும் அபகரித்துக்கொண்டனர்.
மிரட்டல்
இதுசம்பந்தமாக அதிகாரிகளிடம் மனு அளித்தும் இதுநாள் வரைக்கும் நடவடிக்கை இல்லை. என்னை ஏமாற்றி அபகரித்த சொத்தை என்னிடம் திருப்பி ஒப்படைக்குமாறு கேட்டதற்கு ரூ.25 லட்சம் கொடுத்தால்தான் தருவோம் என்று கூறி என்னை மிரட்டி வருகின்றனர். எனவே அவர்கள் 2 பேர் மீதும் கடும் நடவடிக்கை எடுத்து எனது சொத்தை மீட்டுத்தர வேண்டும் என்றார்.
இதை கேட்டறிந்த போலீசார், இதுகுறித்து மாவட்ட கலெக்டரின் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினர். அதன்பேரில் பாப்பம்மாளும், அவரது குடும்பத்தினரும் தங்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.
Related Tags :
Next Story