எருது விடும்விழாவில் பங்கேற்கும் காளைகளுக்கு போதைபொருள் வழங்கப்படவில்லை என்பதை உறுதி செய்ய வேண்டும்
எருது விடும்விழாவில் பங்கேற்கும் காளைகளுக்கு போதைபொருள் வழங்கப்படவில்லை என்பதை உறுதி செய்ய வேண்டும் என்று ஜல்லிக்கட்டு ஆய்வுக்குழு உறுப்பினர் கூறினார்.
திருப்பத்தூர்
எருது விடும்விழாவில் பங்கேற்கும் காளைகளுக்கு போதைபொருள் வழங்கப்படவில்லை என்பதை உறுதி செய்ய வேண்டும் என்று ஜல்லிக்கட்டு ஆய்வுக்குழு உறுப்பினர் கூறினார்.
ஆய்வுக் கூட்டம்
திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் ஜல்லிக்கட்டு போட்டிகளை அரசு வகுத்துள்ள நெறிமுறைகள் அடிப்படையில் நடத்துவது தொடர்பான ஆய்வுக் கூட்டம் நடந்தது. கலெக்டர் அமர்குஷ்வாஹா முன்னிலை வகித்தார். இதில் இந்திய கால்நடை நல வாரிய ஜல்லிக்கட்டு ஆய்வுக் குழு உறுப்பினரும், கண்காணிப்பு அலுவலருமான எஸ்.கே.மிட்டல் தலைமை தாங்கி பேசினார்.
அப்போது அவர் பேசியதாவது:-
தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டு போட்டியான ஜல்லிக்கட்டினை மீட்டெடுத்து, தொடர்ந்து நடைபெறும் வகையில் அரசு ஜல்லிக்கட்டிற்கான வழிகாட்டு நெறிமுறைகளை வகுத்துள்ளது. அரசு வகுத்துள்ள வழிகாட்டு நெறிமுறைகளின் அடிப்படையில் ஜல்லிக்கட்டு போட்டிகள் மற்றும் எருதுவிடும் திருவிழாக்கள் நடைபெறுவதை மாவட்ட நிர்வாகம் மற்றும் விழா குழுவினர் உறுதி செய்ய வேண்டும். கால்நடைகளுக்கும், மனிதர்களுக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில் நடத்த தகுந்த ஏற்பாடுகளை விழா குழுவினர் ஏற்பாடு செய்ய வேண்டும்.
போதைபொருள்
எருதுவிடும் திருவிழாக்களில் பங்கேற்கும் காளைகள் அனைத்தும் முழு உடல் தகுதி பெற்றுள்ளனவா என்பது குறித்தும், அவைகளுக்கு எவ்வித போதைப் பொருட்களும் வழங்கப்படவில்லை என்பதனை கால்நடை பராமரிப்புத் துறையினர் மூலமாக உறுதி செய்திட வேண்டும். வீரர்கள் அனைவரும் அரசு தெரிவித்துள்ள கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி 2 தவணை கொரோனா தடுப்பூசி செலுத்தியவர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும்.
எருதுவிடும் திருவிழாவில் பாதிப்பு ஏற்படும் மனிதர்கள் மற்றும் காளைகளுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் போதுமான அளவில் மருத்துவ குழுவினர் இருக்க வேண்டும். நிகழ்ச்சியில் எவ்வித சட்டம், ஒழுங்கு பாதிப்புகளும் ஏற்படாத வகையில் காவல் துறையினர் மூலமாக தகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் வளர்மதி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் வில்சன் ராஜசேகர், வருவாய் கோட்டாட்சியர் லட்சுமி, போலீஸ் துணை சூப்பிரண்டுகள் சாந்தலிங்கம், சுரேஷ்பாண்டியன், சரவணன், தாசில்தார்கள் சிவபிரகாசம், அனந்தகிருஷ்ணன், சம்பத், பூங்கொடி, பழனி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story