ஒடிசா மாநில வாலிபரை கத்தியால் வெட்டிய மில் தொழிலாளி கைது
ஒடிசா மாநில வாலிபரை கத்தியால் வெட்டிய மில் தொழிலாளி கைது
மங்கலம்:
மங்கலம் அருகே தங்கையுடன் பழகியதால் ஆத்திரம் அடைந்து ஒடிசா மாநில வாலிபரை கத்தியால் வெட்டிய மில் தொழிலாளி கைது செய்யப்பட்டார்.
இது பற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
தங்கையுடன் பழக்கம்
ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த 18 வயது வாலிபர் ஒருவர் மங்கலத்தை அடுத்த வலையபாளையம் பகுதியில் உள்ள தனியார் ஸ்பின்னிங் மில்லில் வேலை பார்த்து வந்தார். இதே மில்லில் மண்டு மோகநந்தியா (20) என்பவரும் தொழிலாளியாக பணியாற்றி வந்தார். இவர்கள் இருவரும் அண்ணன்-தம்பி முறையில் உறவினர்கள் ஆவார்கள்.
இந்த நிலையில் 18 வயது வாலிபர் கடந்த ஒரு ஆண்டிற்கு முன்பு தனது சொந்த ஊரான ஒடிசா மாநிலத்திற்கு சென்றுள்ளார். அப்போது அவருக்கும், மண்டு மோகநந்தியாவின் தங்கைக்கும் பழக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த தகவல் மண்டுமோகநந்தியாவுக்கு தெரிந்துள்ளது.
கத்தியால் வெட்டினார்
ஒடிசா மாநிலத்தில் இருந்து கடந்த 7-ந்தேதி தான் ஏற்கனவே வேலை பார்த்த ஸ்பின்னிங் மில்லுக்கு மீண்டும் அந்த வாலிபர் வேலைக்கு சேர்ந்துள்ளார். ஏற்கனவே கோபத்தில் இருந்த மண்டு மோகநந்தியா, மில்லில் பணிக்கு சேர்ந்த வாலிரை பார்த்ததும் ஆத்திரமடைந்தார். பின்னர் மறுநாள் அந்த வாலிபர் மில்லில் வேலை செய்துவிட்டு இரவு தனது அறைக்கு தூங்க சென்றார்.
இதனால் நள்ளிரவு 1.30 மணியளவில் அந்த வாலிபரின் அறைக்குள் நுழைந்த மண்டு மோகநந்தியா தான் கொண்டு வந்த கத்தியால் வாலிபரின் கை, தோள்பட்டை, காது ஆகிய இடங்களில் வெட்டிவிட்டு தப்பிவிட்டார். பின்னர் வாலிபரின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் மில் உரிமையாளருக்கும், மங்கலம் போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர்.
தொழிலாளி கைது
பின்னர் காயம்பட்ட வாலிபரை மீட்டு சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். இது தொடர்பாக கொலைமுயற்சி வழக்கு பதிவு செய்து மங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இதையடுத்து மங்கலம் போலீசார் மில் தொழிலாளி மண்டு மோகநந்தியாவை தீவிரமாக தேடி வந்தனர்.
இந்த நிலையில் மங்கலத்தை அடுத்த அய்யன்கோவில் அருகே நின்றுகொண்டிருந்த மண்டு மோகநந்தியாவை கைது செய்த மங்கலம் போலீசார் அவரை நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.
----
Related Tags :
Next Story