சத்துவாச்சாரியில் டாஸ்மாக் கடையை நிரந்தரமாக மூடக்கோரி பொதுமக்கள் மனு
சத்துவாச்சாரியில் டாஸ்மாக் கடையை நிரந்தரமாக மூடக்கோரி பொதுமக்கள், குறைதீர்வு கூட்டத்தில் கலெக்டரிடம் கோரிக்கை மனு வழங்கினர்.
வேலூர்
சத்துவாச்சாரியில் டாஸ்மாக் கடையை நிரந்தரமாக மூடக்கோரி பொதுமக்கள், குறைதீர்வு கூட்டத்தில் கலெக்டரிடம் கோரிக்கை மனு வழங்கினர்.
மக்கள் குறைதீர்வு கூட்டம்
வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்வு கூட்டம் நடைபெற்றது. கலெக்டர் குமாரவேல்பாண்டியன் தலைமை தாங்கினார். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த பொதுமக்கள் தங்கள் கோரிக்கை மற்றும் புகார்களை மனுக்களாக வழங்கினர். பெறப்பட்ட மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு கலெக்டர் குமாரவேல்பாண்டியன் உத்தரவிட்டார்.
வேலூர் சத்துவாச்சாரி நேதாஜிநகர் மந்தைவெளியில் இருந்து பாலாற்றுக்கு செல்லும் வழியில் புதிதாக டாஸ்மாக் கடை கடந்த சில வாரங்களுக்கு முன்பு திறக்கப்பட்டது. இதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து கடை மூடப்பட்டது. இதையடுத்து கடந்த வாரம் மீண்டும் கடை திறக்கப்பட்டது. இதை கண்டித்து அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். அதேவேளையில் கடையை திறக்கக்கோரி மதுபிரியர்களும் போராட்டம் நடத்தினர். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்தநிலையில் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் நேற்று நடந்த குறைதீர்வு கூட்டத்தில் கலெக்டர் குமாரவேல்பாண்டியனிடம் புகார் மனு அளித்தனர்.
நிரந்தரமாக மூட வேண்டும்
அந்த மனுவில், எங்கள் பகுதியில் அமைக்கப்பட்ட டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து நாங்கள் போராடினோம். ஆனாலும் கடை மூடப்படாமல் அதே இடத்தில் உள்ளது. குடியிருப்புக்கு மிக அருகில் திறக்கப்பட்டுள்ள இந்த கடையால் அசம்பாவித சம்பவங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. அந்த வழியாக பள்ளி, கல்லூரி மாணவிகள் காட்பாடிக்கு சென்று வருகின்றனர்.
அவர்களுக்கும் இடையூறு ஏற்படும். இதனால் டாஸ்மாக் கடையை நிரந்தரமாக மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. மனுவை பெற்றுக்கொண்ட கலெக்டர் இதுகுறித்து நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.
வேலூர் கொணவட்டம், ரோஜாமேடு பின்புறம் உள்ளிட்ட பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் அளித்த மனுவில் சதுப்பேரி ஏரிகால்வாயை ஆக்கிரமிப்பு செய்திருப்பதாக எங்கள் வீடுகளை இடித்து வருகின்றனர். இதுவரை 30-க்கும் மேற்பட்ட வீடுகள் இடிக்கப்பட்டுள்ளன. தொடர்ந்து அந்த பகுதியில் வீடுகளை இடிக்கும் பணி நடந்து வருகிறது.
மாற்று இடம்
நாங்கள் அனைவரும் ஏழை எளிய குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். கூலி வேலை செய்து வாழ்க்கையை கடத்தி வந்தோம். தற்போது வீடுகள் இல்லாமல் அவதிப்பட்டு வருகிறோம். எங்களுக்கு மாற்று இடம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
வேலூர் மாவட்ட ஊராட்சிகளில் பணிபுரியும் தூய்மைப் பணியாளர்கள் அளித்துள்ள மனுவில் வேலூர் மாவட்டத்தில் உள்ள ஊராட்சிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பகுதிநேர தூய்மைப் பணியாளர்கள் பணியாற்றி வருகிறோம். கடந்த 2 ஆண்டுகளாக எங்களுக்கு சம்பள உயர்வு வழங்கப்படவில்லை. ஏற்கனவே விடுக்கப்பட்ட அரசு ஆணையின் அடிப்படையில் எங்களுக்கு சம்பள உயர்வு வழங்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி உள்ளிட்ட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story