கால்வாய்க்குள் கார் பாய்ந்து மதுரை வாலிபர் பலி


கால்வாய்க்குள் கார் பாய்ந்து மதுரை வாலிபர் பலி
x
தினத்தந்தி 11 April 2022 11:23 PM IST (Updated: 11 April 2022 11:23 PM IST)
t-max-icont-min-icon

பரமக்குடி அருகே கால்வாய்க்குள் கார் பாய்ந்து ஒருவர் பலியானார். 3 பேர் படுகாயம் அடைந்தனர்.

பரமக்குடி, 
பரமக்குடி அருகே கால்வாய்க்குள் கார் பாய்ந்து வாலிபர் பலியானார். 3 பேர் படுகாயம் அடைந்தனர்.
திருமணம்
ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியில் நடைபெறும் நண்பரின் திருமண நிகழ்ச்சிக்கு செல்ல மதுரை, திருப்பரங்குன்றம் பகுதியை சேர்ந்த 4 பேர் காரில் சென்றனர். அந்த கார் நேற்று அதிகாலை 2.30 மணிக்கு பரமக்குடி அருகே உள்ள வேந்தோணி நான்குவழிச்சாலை அருகே வந்தபோது நிலை தடுமாறி சாலையின் நடுவில் இருந்த தடுப்பு மீது மோதியது. 
பின்னர் அந்த கார் நடுரோட்டில் உருண்டு அருகில் இருந்த கால்வாய்க்குள் பாய்ந்தது. இதில் காரை ஓட்டி வந்த மதுரை இந்திரா நகரைச் சேர்ந்த தவமணி மகன் பாலமுருகன் (வயது 27) படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பலியானார். 
அலறல்
காருக்குள் இருந்தவர்களின் அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்த கடைக்காரர்கள் ஓடி வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.  பின்பு தீயணைப்பு துறையினருக்கும், போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதை தொடர்ந்து அவர்களும் வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர். 
இதில் காருக்குள் இருந்த திருப்பரங்குன்றம் கூத்தியார்குண்டு பகுதியை சேர்ந்த பிச்சைமணி மகன் அருண்குமார் (29), மதுரை அண்ணா நகரை சேர்ந்த ராமர் மகன் ஜெயக்குமார் (20), இறந்த தவமணியின் சகோதரர் விஜய் (24) ஆகிய 3 பேரும் படுகாயம் அடைந்தனர். 
விசாரணை
அவர்களை மீட்டு பரமக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளித்து மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர். இச்சம்பவம் குறித்து பரமக்குடி நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story