

மத்திகிரி:
வாகன சோதனை
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் தாலுகா மத்திகிரி அருகே உள்ளது பூனப்பள்ளி. இங்குள்ள சோதனைச்சாவடி அருகில் மத்திகிரி போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன், சப்-இன்ஸ்பெக்டர் சிற்றரசு மற்றும் போலீசார் நேற்று அதிகாலை வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக மினி லாரி ஒன்று வந்தது. போலீசார் அந்த லாரியை நிறுத்தி அதில் இருந்த 2 பேரிடம் விசாரணை நடத்தினர். அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் கூறினார்கள். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் லாரியில் சோதனை செய்தனர்.
9 டன் புகையிலை பொருட்கள்
அந்த லாரியில் 9 டன் அளவிலான குட்கா, ஹான்ஸ், பான்மசாலா உள்ளிட்ட தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருந்தன. விசாரணையில் அவை பெங்களூருவில் இருந்து ஓசூர் வழியாக சென்னைக்கு கடத்த முயன்றது தெரிய வந்தது.
இதைத்தொடர்ந்து லாரி டிரைவரான தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் அகத்திகுளத்தை சேர்ந்த தர்மலிங்கம் (வயது 37), ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள பண்டாரவிளையை சேர்ந்த மணிகண்டன் ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
தீவிர விசாரணை
மேலும் ரூ.50 லட்சம் மதிப்புள்ள 9 டன் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள், மினி லாரி ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். இதில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா? என போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.