கள்ளக்குறிச்சி நகர்மன்ற கூட்டத்தில் அ.தி.மு.க. கவுன்சிலர்கள் வெளிநடப்பு


கள்ளக்குறிச்சி நகர்மன்ற கூட்டத்தில் அ.தி.மு.க. கவுன்சிலர்கள் வெளிநடப்பு
x
தினத்தந்தி 11 April 2022 11:28 PM IST (Updated: 11 April 2022 11:28 PM IST)
t-max-icont-min-icon

சொத்து வரி உயர்வை கண்டித்து கள்ளக்குறிச்சி நகர்மன்ற கூட்டத்தில் இருந்து அ.தி.மு.க. கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர்.

கள்ளக்குறிச்சி, 

கள்ளக்குறிச்சி நகராட்சி அலுவலகத்தில்  நகர்மன்ற அவசர கூட்டம் நேற்று நடைபெற்றது. இதற்கு நகர் மன்ற தலைவர் சுப்புராயலு தலைமை தாங்கினார். நகராட்சி ஆணையர் குமரன், நகர்மன்ற துணை தலைவர் ஷமிம்பானு அப்துல்ரசாக் ஆகியோர்  முன்னிலை வகித்தனர்.கூட்டத்தில் கள்ளக்குறிச்சி நகராட்சியில் உள்ள 410 தெருக்கள் ஏ,பி,சி என 3 மண்டலமாக பிரிக்கப்பட்டன. அதன்படி 189 தெருக்கள் ஏ மண்டலமாகவும், 203 தெருக்கள் பி மண்டலமாகவும், 18 தெருக்கள் சி மண்டலமாக பிரிக்கப்பட்டு சொத்து வரி சீராய்வு செய்து உயர்த்துதல், கள்ளக்குறிச்சி நகராட்சியில் போதிய நிதி இல்லாததால் பாதாள சாக்கடை திட்டத்திற்கு தேவையான ஆய்வு பணிகள் மேற்கொண்டு விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணியினை தமிழ்நாடு நகர்ப்புற உள்கட்டமைப்பு நிதி சேவைகள் நிறுவன மானிய நிதி மூலம்  கலந்தாலோசகர் நியமித்து கள்ளக்குறிச்சி நகராட்சிக்கு பாதாள சாக்கடை திட்டத்திற்கு விரிவான திட்ட கருத்துரு தயார் செய்வது என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

வெளிநடப்பு

 முன்னதாக கூட்டத்தில் கள்ளக்குறிச்சி நகராட்சியில் உள்ள தெருக்களை ஏ,பி,சி என 3 மண்டலமாக பிரித்து சொத்துவரி உயர்த்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அ.தி.மு.க. கவுன்சிலர்கள் பாபு, முருகன், சத்தியா குட்டி, விமலா அர்ஜுனன், சங்கீதா ஜெயராமன் ஆகிய 5 கவுன்சிலர்கள் கருப்பு உடை அணிந்து கலந்து கொண்டனர். பின்னர் அவர்கள் சொத்து வரி உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தனர். தொடர்ந்து அவர்கள் மாட்டு வண்டியில் ஊர்வலமாக சென்று சொத்து வரிக்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷங்களை எழுப்பினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. 

Next Story