திருப்பத்தூர் அருகே 3,000 ஆண்டுகளுக்கு முற்பட்ட கற்திட்டைகள் கண்டுபிடிப்பு
திருப்பத்தூர் அருகே 3,000 ஆண்டுகளுக்கு முற்பட்ட கற்திட்டைகள் மற்றும் சோழர்கால சாசனக்கல் கண்டெடுக்கப்பட்டது.
திருப்பத்தூர்
திருப்பத்தூர் அருகே 3,000 ஆண்டுகளுக்கு முற்பட்ட கற்திட்டைகள் மற்றும் சோழர்கால சாசனக்கல் கண்டெடுக்கப்பட்டது.
கற்திட்டைகள்
திருப்பத்தூர் மாவட்டம், ஆண்டியப்பனூருக்கு அருகே ஊர்மேடு என்ற இடத்திலுள்ள மலைக்குன்றில் தூய நெஞ்சக் கல்லூரி தமிழ்த்துறை பேராசிரியர் ஆ.பிரபு மற்றும் ஆய்வு மாணவர்கள் சந்தோஷ், சரவணன் ஆகியோர் மேற்கொண்ட கள ஆய்வில் 3,000 ஆண்டுகளுக்கு முற்பட்ட கற்திட்டைகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் சோழர்காலத்து சாசனக்கல் ஒன்றும் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஆ.பிரபு கூறுகையில் ஆண்டியப்பனூரில் இருந்து சுமார் 6 கி.மீ. தொலைவில் ஊர்மேடு என்ற இடத்தில் சின்னப்பாண்டவர் குட்டை என்ற இடம் குறித்த தகவல் பெறப்பட்டது. தொடர்ந்து அங்குள்ள சிறிய மலைக்குன்றில் ஆய்வு செய்தபோது அங்கு 15-க்கும் மேற்பட்ட கற்திட்டைகள் இருப்பது தெரியவந்தது. இப்பகுதியில் ஓடும் காட்டாற்றின் அருகே சாசனக்கல் என்று இவ்வூர் மக்களால் அழைக்கப்படும் எல்லைக் கல் (சூலக்கல்) ஒன்றும் கண்டறியப்பட்டது.
சாசன கல்
இங்குள்ள கற்திட்டை கரடுமுரடான கற்களைக் கொண்டு அமைக்கப்பட்டுள்ளன. பாறைகளில் இருந்து வெட்டியெடுக்கப்பட்ட பலகைக் கற்களைக் கொண்டு அமைக்கப்படும் கல்லறை அமைப்பே கற்திட்டைகள் என்று அழைக்கப்படுகிறது. இப்பகுதியானது 3,000 ஆண்டுகளுக்கு முன்னரே மக்கள் வாழ்ந்த பகுதியென அடையாளம் காண இதுபோன்ற வரலாற்றுத் தடயங்கள் உதவுகின்றது.
அடர்ந்த முட்புதருக்குள் இருந்த சாசன கல்லினைத் தேடிக் கண்டறிந்து சுத்தம் செய்து பார்த்தபோது அந்த கல் சூலக் கல் என அறிய முடிந்தது. அதில் திரிசூலம் கோட்டுருவ அமைப்பில் நடுவில் செதுக்கப்பட்டு அதன் இருபுறமும் சூரியன், பிறை நிலவு வடிக்கப்பட்டுள்ளன. கீழ்ப்புறம் உடுக்கை வடிவம் காட்டப்பட்டுள்ளது. இக்குறியீடுகள் சைவத்திருக்கோவில்களுக்கு நிலக்கொடை வழங்கியதைக் குறிக்கவோ அல்லது கோவிலுக்குரிய நில எல்லையினைக் குறிக்கவோ நடப்படுவதாகும்.
இந்த கல் சோழர்காலத்தை சேர்ந்ததாக இருப்பதற்கு வாய்ப்புள்ளது. ஆண்டியப்பனூரில் ஏற்கனவே இரண்டாம் குலோத்துக்க சோழன் காலத்தை சேர்ந்த கல்வெட்டு ஒன்று கண்டறியப்பட்டு ஆவணப்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story