கலெக்டர் அலுவலகத்துக்கு பெட்ரோல் கேனுடன் வந்த குடும்பத்தினரால் பரபரப்பு


கலெக்டர் அலுவலகத்துக்கு பெட்ரோல் கேனுடன் வந்த குடும்பத்தினரால் பரபரப்பு
x
தினத்தந்தி 11 April 2022 11:42 PM IST (Updated: 11 April 2022 11:42 PM IST)
t-max-icont-min-icon

கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்துக்கு பெட்ரோல் கேனுடன் வந்த குடும்பத்தினரால் பரபரப்பு ஏற்பட்டது.

கள்ளக்குறிச்சி, 

சங்கராபுரம் அருகே புதுப்பேட்டை கிராமத்தை சேர்ந்தவர் முத்துசாமி. இவருடைய மகன்கள் கார்த்திகேயன், ராஜேந்திரன். விவசாய கூலி தொழிலாளர்களான இவர்கள் தங்களது தாய் மற்றும் குடும்பத்தினருடன் கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்துக்கு தீக்குளிக்க பெட்ரோல் கேனுடன் வந்தனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், அவர்களை தடுத்து நிறுத்தி பெட்ரோல் கேனை பிடுங்கினர். தொடர்ந்து அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் கூறுகையில், புதுப்பேட்டை கிராமத்தில் கடந்த 2007-ம் ஆண்டு புதிதாக அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டு அதற்காக நில உரிமையாளர்களிடமிருந்து நிலம் கையகப்படுத்தப்பட்டது. அதன்படி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க நாங்கள் 60 சென்ட் நிலத்தை எழுதி கொடுத்தோம். எங்களிடம் 9 சென்ட் நிலம் மீதமிருந்தது. தற்போது அந்த நிலத்தை சுகாதாரத்துறையினர் ஆக்கிரமித்து ஆரம்ப சுகாதார நிலையத்துக்காக பயன்படுத்தி வருகின்றனர். இதையடுத்து எங்களது இடத்தை மீட்டு தரக்கோரி அதிகாரிகளை சந்தித்து கோரிக்கை விடுத்தோம். இருப்பினும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து கலெக்டர் அலுவலகத்துக்கு பெட்ரோல் கேனுடன் வந்ததாக தெரிவித்தனர். இதையடுத்து அவர்களிடம் போலீசார், இனி இது போன்ற செயலில் ஈடுபட்டக்கூடாது என அறிவுறுத்தினர். மேலும் உங்களது கோரிக்கை குறித்து கலெக்டர் அலுவலகத்தில் மனு அளியுங்கள் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர். அதன்படி அவர்கள் மனுஅளித்து விட்டு அங்கிருந்து சென்றனர்.  இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.


Next Story