பத்மநாபபுரம், கொல்லங்கோடு நகராட்சி கூட்டத்தில் சொத்துவரி உயர்வை கண்டித்து பா.ஜனதா கவுன்சிலர்கள் வெளிநடப்பு


பத்மநாபபுரம், கொல்லங்கோடு நகராட்சி கூட்டத்தில் சொத்துவரி உயர்வை கண்டித்து பா.ஜனதா கவுன்சிலர்கள் வெளிநடப்பு
x
தினத்தந்தி 11 April 2022 11:42 PM IST (Updated: 11 April 2022 11:42 PM IST)
t-max-icont-min-icon

பத்மநாபபுரம், கொல்லங்கோடு நகராட்சி கூட்டங்களில் சொத்துவரி உயர்வை கண்டித்து பா.ஜனதா கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர்.

தக்கலை, 
பத்மநாபபுரம், கொல்லங்கோடு நகராட்சி கூட்டங்களில்  சொத்துவரி உயர்வை கண்டித்து பா.ஜனதா கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர்.
நகராட்சி கூட்டம்
பத்மநாபபுரம் நகராட்சி சாதாரண கூட்டம் தலைவர் அருள்சோபன் தலைமையில் நடந்தது. துணைத்தலைவர் மணி, ஆணையாளர் காஞ்சனா, சுகாதார அலுவலர் ராஜாராம், என்ஜினீயர் லதா, மேலாளர் சக்திகுமார் மற்றும் அனைத்து கவுன்சிலர்களும் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில், குடியிருப்புகளுக்கு 25 சதவீதம் முதல் வீட்டின் பரப்பளவை பொறுத்து 100 சதவீதமும், வணிக கட்டிடங்களுக்கு 100 சதவீதமும், தொழிற்சாலை, பள்ளி, கல்லூரி கட்டிடங்களுக்கு 75 சதவீதமும், காலிமனைகளுக்கு 100 சதவீதமும் வரி உயர்வு செய்வதற்கான தீர்மானம் கொண்டுவரப்பட்டது.
எதிர்ப்பு
இதற்கு எதிப்பு தெரிவித்த பா.ஜனதா கவுன்சிலர் உண்ணிகிருஷ்ணன் பேசும் போது, ‘கொரோனா காலகட்டத்தில் இருந்து பொதுமக்கள் முழுமையாக மீண்டு வராத நிலையில் அவர்களுக்கு புதிய சுமையாக இந்த வரி உயர்வு உள்ளது. ஆகவே இதை மறுபரிசீலனை செய்து அரசுக்கு அனுப்ப வேண்டும்’ என கூறினார்.
இதற்கு பதில் அளித்த தலைவர் அருள் சோபன் பேசும்போது, ‘கடந்த 14 ஆண்டுகளாக எந்தவித வரி உயர்வும் செய்யப்படவில்லை. இதனால் நகராட்சி நிர்வாக செலவினங்களுக்கு நிதி பற்றாகுறை ஏற்பட்டுள்ளது. ஆகவே வரியை உயர்த்துவது அவசியம். இதற்கு கவுன்சிலர்கள் அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்’ என கூறினார்.
வெளிநடப்பு
இதற்கு உடன்படாத பா.ஜனதா கவுன்சிலர்கள் உண்ணிகிருஷ்ணன், நாகராஜன், ஸ்ரீதேவி, சிவா, கீதா, பிரியதர்சினி, ஷீபா, மற்றும் சுயேச்சை கவுன்சிலர் செந்தில்குமார் ஆகியோர் வரி உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷங்கள் எழுப்பியபடி வெளிநடப்பு செய்தனர். அதன்பிறகு தி.மு.க. மற்றும் சுயேச்சை உறுப்பினர்களின் ஆதரவுடன் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கொல்லங்கோடு
கொல்லங்கோடு நகராட்சியில் தமிழக அரசு அறிவித்துள்ள புதிய சொத்துவரி மற்றும் காலிமனை வரி உயர்வு குறித்த  அவசர ஆலோசனை கூட்டம் நகராட்சி தலைவர் ராணி தலைமையில் நேற்று நடந்தது. கூட்டத்தில் அனைத்து கவுன்சிலர்களும் கலந்து கொண்டு ஆலோசனைகள் வழங்கினர். அப்போது சொத்து வரி உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து பா.ஜனதா கவுன்சிலர்கள் 5 பேர் வெளிநடப்பு செய்தனர். தொடர்ந்து அவர்கள் சொத்து வரி உயர்வை ரத்து செய்ய கோரி கோஷங்கள் எழுப்பினர்.
அதே நேரத்தில் கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த 10 கவுன்சிலர்களும் புதிதாக அறிவித்துள்ள வரி விதிப்பு சட்டத்தை ரத்து செய்து மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று கோரிக்கை மனுவில் கையெழுத்து இட்டு கொடுத்தனர். இதனால் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story