கேரள கோவிலில் சடங்குகளை செய்ய 11 அடி உயர ரோபோ யானை


கேரள கோவிலில் சடங்குகளை செய்ய 11 அடி உயர ரோபோ யானை
x

கேரளாவில் கோவிலில் சடங்குகளை செய்ய 11 அடி உயரத்தில், 800 கிலோ எடை கொண்ட ரோபோ யானை நன்கொடையாக வழங்கப்பட்டு உள்ளது.



திரிச்சூர்,


கேரளாவின் திரிச்சூர் நகரில் உள்ள ஸ்ரீகிருஷ்ணன் கோவிலில் இரிஞ்சடப்பள்ளி ராமன் என்ற பெயரிலான ரோபோ யானை ஒன்றை பீட்டா என்ற விலங்குகள் நல அமைப்பு நன்கொடையாக வழங்கி உள்ளது. இதற்கு நடிகை பார்வதி திருவோத்தும் நிதியுதவி செய்து உள்ளார்.

திரிச்சூரை சேர்ந்த 4 கலைஞர்கள் ரூ.5 லட்சம் செலவில் ரோபோ யானையை உருவாக்கி தந்து உள்ளனர். மின்சார சக்தியால் இயங்க கூடிய இந்த யானையின் உட்பகுதியில், 5 இயந்திரங்கள் உள்ளன.

அதனால், உண்மையான யானையை போன்றே இந்த ரோபோ யானை அதன் தலை, கண்கள், காதுகள், வாய், வால் மற்றும் தும்பிக்கை ஆகியவற்றை அசைக்க கூடியது.

இந்த ரோபோ யானை 11 அடி உயரமும், 800 கிலோ எடையும் கொண்டது. இதன்பின்னர், கோவிலில் கடந்த ஞாயிற்று கிழமை நடந்த திருவிழாவில் யானை ராமன் பயன்படுத்தப்பட்டது.

இதுபற்றி கோவிலின் தலைமை பூசாரியான ராஜ்குமார் நம்பூதிரி கூறும்போது, இந்த இயந்திர யானையை வரவேற்றதில் அதிக மகிழ்ச்சியும், நன்றியுடையவர்களாகவும் இருக்கிறோம்.

இதனால், சடங்குகள் மற்றும் திருவிழாக்களை நடத்தும்போது, இம்சிப்பதில் இருந்து விடுபட்டு சுதந்திர முறையில் நடத்த உதவும். பிற கோவில்களும் சடங்குகளுக்கு உண்மையான யானைகளை பயன்படுத்துவதற்கு பதிலாக இதனை பயன்படுத்துவது பற்றி யோசிப்பார்கள் என நம்புகிறேன் என கூறியுள்ளார்.


Next Story