"5,502 காஷ்மீர் பண்டிட்டுகளுக்கு அரசு வேலை " மத்திய மந்திரி தகவல்
5,502 காஷ்மீர் பண்டிட்டுகளுக்கு அரசு வேலை வழங்கப்பட்டுள்ளதாக மாநிலங்களவையில் உள்துறை இணை மந்திரி நித்யானந்த் ராய் தகவல் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,
ஆகஸ்ட் 5, 2019 முதல் இன்று வரை ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகளால் கொல்லப்பட்ட பொதுமக்கள், யாத்ரீகர்கள் மற்றும் பாதுகாப்புப் படை வீரர்களின் எண்ணிக்கை மற்றும் அவர்களில் எத்தனை இந்துக்கள் மற்றும் காஷ்மீரி பண்டிட்டுகள் என்பது பற்றிய விவரங்களை திக்விஜய சிங் கேட்டிருந்தார்.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் திக்விஜய சிங் கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக பதில் அளித்த உள்துறை இணை மந்திரி நித்யானந்த் ராய்,
2018 ஆம் ஆண்டில் 417 ஆக இருந்தது. 2021 இல் 229 ஆக (போராளிகளின்) குறைந்துள்ளது. ஆகஸ்ட் 5, 2019 முதல் ஜூலை 9, 2022 வரை, 128 பாதுகாப்புப் படை வீரர்களும் 118 பொதுமக்களும் கொல்லப்பட்டுள்ளனர்.
ஜம்மு காஷ்மீரில் கொல்லப்பட்ட 118 பொதுமக்களில் 5 பேர் காஷ்மீர் பண்டிட்டுகள் என்றும் 16 பேர் பிற இந்து/சீக்கிய சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் "இந்த காலகட்டத்தில் யாத்ரீகர் யாரும் கொல்லப்படவில்லை," என்று அவர் கூறினார்.
காஷ்மீரில் பாதுகாப்பு நிலைமை கணிசமாக மேம்பட்டுள்ளது எனவும் பிரதமர் மேம்பாட்டுத்திட்டத்தின் கீழ் 5,502 காஷ்மீர் பண்டிட்டுகளுக்கு ஜம்மு - காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதிகளில் அரசு வேலை வழங்கப்பட்டுள்ளன.
கடந்த 2019-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் தற்போது வரை காஷ்மீரி பண்டிட்கள் யாரும் ஜம்மு - காஷ்மீர் பள்ளத்தாக்கிலிருந்து இடம்பெயர்ந்ததாக பதிவுகள் இல்லை என மாநிலங்களவையில் உள்துறை இணை மந்திரி நித்யானந்த் ராய் தகவல் தெரிவித்துள்ளார்.