பணி நீக்கத்தை கண்டித்து ரெயில்வே தூய்மை பணியாளர்கள் 15-வது நாளாக போராட்டம்
பணி நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து உப்பள்ளி ரெயில் நிலையம் முன்பு 15-வது நாளாக தூய்மை பணியாளர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
உப்பள்ளி:
பணி நீக்கம்
தென்மேற்கு ரெயில்வேயின் தலைமை அலுவலகம் தார்வார் மாவட்டம் உப்பள்ளியில் அமைந்துள்ளது. உப்பள்ளி ஸ்ரீசித்தாரோட சுவாமி ரெயில் நிலையத்தில் 100-க்கும் மேற்பட்டோர்கள் தூய்மை பணியாளர்களாக வேலை பார்த்து வந்தனர். இந்த நிலையில் கடந்த 15 நாட்களுக்கு முன்பு ரெயில் நிலையத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வந்த 93 தூய்மை பணியாளர்களை பணி நீக்கம் செய்து ரெயில்வே நிர்வாகம் உத்தரவிட்டது.
இதனால் ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுதொடர்பாக உப்பள்ளி ரெயில் நிர்வாகத்திடம் கேட்டனர். ஆனால் அவர்கள் சரிவர பதில் அளிக்கவில்லை என தெரிகிறது.
15-வது நாளாக போராட்டம்
இதனால், ரெயில்வே நிர்வாகத்தை கண்டித்து ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் உப்பள்ளி ரெயில் நிலையம் முன்பு பந்தல் அமைத்து போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
இந்த நிலையில் 15-வது நாளாக நேற்றும் அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
15 நாட்களாக போராட்டம் நடத்தி வரும் தூய்மை பணியாளர்களை அதிகாரிகள் யாரும் சந்தித்து பேசவில்லை என தெரிகிறது. மேலும் மக்கள் பிரதிநிதிகளும் சந்தித்து குறைகளை கேட்கவில்லை என தெரிகிறது. இதனால், தங்களின் கோரிக்கையை கேட்க கூட யாரும் வரவில்லை என்றும், தங்கள் கோரிக்கை நிறைவேறும் வரை தொடர்ந்து போராட்டம் நடத்துவோம் என்றும் தூய்மை பணியாளர்கள் தெரிவித்துள்ளனர்.