நாய்கள் கடித்து 17 ஆயிரம் பேர் பாதிப்பு
நாய்கள் கடித்து 17 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டிருப்பதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பெங்களூரு:
பெங்களூருவில் தெருநாய்கள் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் நாய் கடித்து காயம் மற்றும் உயிரிழப்பு ஏற்படும் சம்பவங்கள்கள் கடந்த சில நாட்களில் சற்று அதிகரித்தே வருகிறது. இந்த நிலையில் பெங்களூருவில் நாய் கடித்தது தொடர்பாக பதிவான வழக்குகள் குறித்து மாநகராட்சி சார்பில் கூறப்பட்டதாவது:-
பெங்களூருவில் ஐ.டி. நிறுவனங்கள் சாலை, பொம்மனஹள்ளி, ஆர்.ஆர்.நகர் பகுதியில் நாய்கள் கடித்தது தொடர்பான வழக்குகள் அதிகம் பதிவாகி உள்ளது. கடந்த 2019-2020-ம் ஆண்டில் நாய் கடித்தது தொடர்பாக குறைவான வழக்குகள் பதிவாகின. அதே சமயம் 2021-22-ம் ஆண்டில் 17 ஆயிரம் பேரை நாய் கடித்துள்ளதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பெங்களூருவில் மட்டும் 1½ லட்சம் தெரு நாய்கள் மற்றும் 1½ லட்சம் வளர்ப்பு நாய்கள் உள்ளதாக புள்ளிவிபரம் கூறுகிறது. அதில் மகாதேவப்புரா பகுதியில் 46 ஆயிரம் நாய்களும், பொம்மனஹள்ளியில் 38 ஆயிரம் நாய்களும், எலகங்காவில் 36 ஆயிரம் நாய்களும் உள்ளன. அவற்றில் சுமார் 70 ஆயிரம் நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.