பெங்களூரு சிறையில் கைதியிடம் 2 செல்போன்கள், சிம்கார்டுகள் பறிமுதல்
பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அதிகாரிகள் நடத்திய சோதனையின் போது கைதியிடம் இருந்து 2 செல்போன்கள், 3 சிம்கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
பரப்பன அக்ரஹாரா:
செல்போன், சிம்கார்டுகள் சிக்கியது
பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் கைதிகள் செல்போன் பயன்படுத்துவது, கஞ்சா, சிகரெட் உள்ளிட்டவற்றை பயன்படுத்துவது குறித்து தொடர்ந்து குற்றச்சாட்டுகள் வந்த வண்ணம் உள்ளது. இந்த நிலையில், சிறையில் அடைக்கப்பட்டுள்ள கைதிகள் செல்போன் பயன்படுத்துவதாக சிறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, சிறையின் ஒவ்வொரு அறைகளிலும் அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள். ஆனால் எங்கும் செல்போன் உள்ளிட்ட எந்த பொருட்களும் கிடைக்கவில்லை. பின்னர் சிறையின் 2-வது டவர், டி பாரக்கில் அடைக்கப்பட்டுள்ள ஒரு அறையில் சோதனை நடத்தினார்கள். அங்கு 2 செல்போன்கள், 3 சிம்கார்டுகள் சிக்கியது.
கைதி மீது வழக்கு
அந்த செல்போன்கள், சிம் கார்டுகளை பயன்படுத்தியது கைதி சாகர் என்ற ரகிபுல் இஸ்மாயில் தான் பயன்படுத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து, 2 செல்போன்கள், 3 சிம்கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது. கைதி சாகருக்கு செல்போன்கள் மற்றும் சிம் கார்டுகள் எப்படி கிடைத்தது என்பது தெரியவில்லை. கடந்த சில மாதங்களாக அவர் செல்போன் பயன்படுத்தி வந்தது விசாரணையில் தெரிந்தது.
அதே நேரத்தில் சாகர் செல்போன் பயன்படுத்திய விவகாரத்தில் சில சிறையில் பணியாற்றும் ஊழியர்களுக்கு தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்திருப்பதாகவும், அதுபற்றி விசாரித்து வருவதாகவும் சிறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக கைதி சாகர் மீது பரப்பன அக்ரஹாரா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.