பீகார் சிறையில் இருந்து தப்பிய குற்றவாளிகளை என்கவுண்டரில் சுட்டுக்கொன்ற உ.பி. போலீசார்...!


பீகார் சிறையில் இருந்து தப்பிய குற்றவாளிகளை என்கவுண்டரில் சுட்டுக்கொன்ற உ.பி. போலீசார்...!
x

சகோதரர்களான 2 குற்றவாளிகளும் சிறையில் இருந்து தப்பியோடியுள்ளனர்.

லக்னோ,

பீகார் மாநிலத்தில் பல்வேறு குற்றவழக்குகளில் தொடர்புடைய ராஜ்னீஷ், மனீஷ் ஆகிய 2 பேரும் சகோதரர்கள் ஆவர். இந்த 2 பேரும் கைது செய்யப்பட்டு பீகார் மாநிலம் பாட்னா சிறையில் அடைக்கப்பட்டனர். ஆனால், சிறையில் இருந்து 2 பேரும் தப்பிச்சென்றனர். இந்த 2 குற்றவாளிகளையும் பீகார் போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்.

இதனிடையே, உத்தரபிரதேச மாநிலம் படகான் பகுதி போலீஸ் சப்- இன்ஸ்பெக்டரின் துப்பாக்கி சமீபத்தில் திருடப்பட்டது. துப்பாக்கியை திருடியது யார் என்பது குறித்து உத்தரபிரதேச போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில், சப்-இன்ஸ்பெக்டர் துப்பாக்கியை திருடியவர்கள் வாரணாசியில் இருப்பதாக உத்தரபிரதேச போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்த தகவலை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர்.

அப்போது, அங்கு பதுங்கி இருந்த சிலர் போலீசார் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதனை தொடர்ந்து போலீசார் பதிலடி தாக்குதல் நடத்தினர்.

போலீசாரின் பதிலடியில் தாக்குதல் நடத்தியவர்களில் 2 பேர் மீது துப்பாக்கிகுண்டு பாய்ந்தது. இந்த என்கவுண்டரின் போது ஒரு நபர் தப்பியோடிவிட்டார். சப் இன்ஸ்பெக்டரிடமிருந்து திருடப்பட்ட துப்பாக்கியும் மீட்கப்பட்டது.

இதையடுத்து, துப்பாக்கிச்சூட்டில் படுகாயமடைந்த 2 பேரையும் மீட்ட போலீசார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 2 பேரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.

இது தொடர்பாக விசாரணை மேற்கொண்ட போலீசார், உயிரிழந்த 2 பேரும் பீகார் சிறையில் இருந்து தப்பிய குற்றவாளிகளான சகோதரர்கள் ராஜ்னீஷ், மனீஷ் என்பது தெரியவந்தது. இந்த என்கவுண்டர் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story