தொடர் திருட்டில் ஈடுபட்ட 2 பேர் கைது; ரூ.21 லட்சம் தங்கம்-வெள்ளி பொருட்கள் மீட்பு
சிகாரிபுரா தாலுகாவில் தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்த 2 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து ரூ.21 லட்சம் தங்க நகைகள் மற்றும் வெள்ளி பொருட்களை மீட்டனர்.
சிவமொக்கா;
பூட்டை உடைத்து...
சிவமொக்கா மாவட்டம் சிகாரிபுரா தாலுகா சிராளகொப்பா போலீஸ் எல்லைக்கு உட்பட்ட தோகர்சி கிராமத்தை சேர்ந்த ஒருவர் கடந்த 10 நாட்களுக்கு முன்பு தன் வீட்டை பூட்டி விட்டு வெளியூர் சென்று இருந்தார்.
அப்போது அவரது வீட்டின் கதவின் பூட்டை உடைத்து மர்மநபர்கள் சிலர் உள்ளே புகுந்தனர். இதையடுத்து அவர்கள் பீரோவை உடைத்து அதில் இருந்து தங்க நகைகள் மற்றும் வெள்ளி பொருட்களை திருடிவிட்டு அங்கிருந்து தப்பி சென்றனர்.
இந்த நிலையில் வீட்டிற்கு திருப்பி வந்த வீட்டின் உரிமையாளர் கதவின் பூட்டு உடைந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.
நகைகள் திருட்டு
இதையடுத்து அவர் வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த தங்க நகைகள் மற்றும் வெள்ளி பொருட்கள் திருட்டுபோய் இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். அப்போது அவருக்கு மர்மநபர்கள் வீடு புகுந்து திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது.
உடனடியாக அவர் இதுகுறித்து சிராளகொப்பா போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர்.
இதையடுத்து போலீஸ் மோப்ப நாய்கள் வரைவழைக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது. மோப்ப நாய்கள் சிறிது தூரம் மோப்பம் பிடித்து கொண்டு சென்று நின்றுவிட்டது. யாரையும் கவ்விப்பிடிக்கவில்லை. மேலும் இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி மர்மநபர்களை வலைவீசி தேடிவந்தனர்.
2 போ் கைது
இந்த நிலையில் அந்த திருட்டில் ஈடுபட்ட 2 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் சிராளகொப்பா கிராமத்தை சேர்ந்த சின்னசாமி (வயது 50) மற்றும் மகாதேவய்யா (42) என்பதும், அவர்கள் மீது சிராளகொப்பா போலீஸ் நிலையத்தில் 12 திருட்டு வழக்குகளும், சிகாரிபுரா போலீஸ் நிலையத்தில் 2 திருட்டு வழக்குகளும் பதிவாகி இருந்ததும் தெரியவந்தது.
அவர்கள் தொடர்ந்து திருட்டில் ஈடுபட்டு வந்ததும் தெரிந்தது. அவர்களிடம் இருந்து ரூ.21 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகள் மற்றும் வெள்ளி பொருட்கள் மீட்கப்பட்டது. கைதான 2 பேரிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.