இளம்பெண் உள்பட 2 பேரை மிரட்டி ரூ.4 ஆயிரம் பறிப்பு; 2 போலீசார் பணி இடைநீக்கம்


இளம்பெண் உள்பட 2 பேரை மிரட்டி ரூ.4 ஆயிரம் பறிப்பு; 2 போலீசார் பணி இடைநீக்கம்
x
தினத்தந்தி 13 Dec 2022 12:15 AM IST (Updated: 13 Dec 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

இளம்பெண் உள்பட 2 பேரை மிரட்டி ரூ.4 ஆயிரம் பறித்த 2 போலீசார் பணி இடைநீக்கம் செய்யப்பட்டனர்.

ஆடுகோடி:

பெங்களூரு சம்பிகேஹள்ளி போலீஸ் நிலையத்தில் பணியாற்றி வரும் போலீஸ்காரர்களான நாகேஷ், ராஜேஸ் ஆகியோர் தம்பதியை மிரட்டி ரூ.1,000 பறித்ததால் பணி இடைநீக்கம் செய்யப்பட்டனர். இந்த நிலையில் பெண் உள்பட 2 பேரை மிரட்டி பணம் பறித்த மேலும் 2 போலீஸ்காரர்கள் பணி இடைநீக்கம் செய்யப்பட்டு உள்ளனர். அதுபற்றிய விவரம் பின்வருமாறு:-

பெங்களூரு ஆடுகோடி போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரர்களாக பணியாற்றி வரும் அரவிந்த், மாலப்பா வாலிகர் ஆகியோர் நேற்று முன்தினம் இரவு ரோந்து சென்றனர். அப்போது கோரமங்களாவில் உள்ள வணிக வளாகம் முன்பு உள்ள கடையில் சிகரெட் புகைத்து கொண்டு இருந்த இளம்பெண்ணான சைத்ரா, அவரது நண்பர் சீராஸ் ஆகியோரிடம் போலீஸ்காரர்கள் 2 பேரும் பணம் கேட்டுள்ளனர். மேலும் பணம் தராவிட்டால் வழக்குப்பதிவு செய்வதாக மிரட்டியதாக கூறப்படுகிறது. இதனால் சைத்ரா ரூ.4 ஆயிரத்தை போன்பே மூலம் அனுப்பியதாக தெரிகிறது. இதுகுறித்து அவர் டுவிட்டர் மூலம் டி.ஜி.பி. பிரவீன் சூட்டிடம் புகார் அளித்தார். இதுகுறித்து நடத்தப்பட்ட விசாரணையில் போலீசார் 2 பேரும் மிரட்டி பணம் பறித்தது தெரியவந்தது. இதனால் 2 பேரையும் பணி இடைநீக்கம் செய்து தெற்கு மண்டல துணை போலீஸ் கமிஷனர் சி.கே.பாபா உத்தரவிட்டு உள்ளார்.

1 More update

Next Story