ரூ.2 ஆயிரம் கோடி போதை பொருள் கடத்தல்; தமிழ் பட தயாரிப்பாளருக்கு தொடர்பு?

உடலுக்கு ஊட்டச்சத்து அளிக்கும் சத்துமாவில் அவற்றை கலந்து பாக்கெட்டுகளாக அடைத்து வெளிநாடுகளுக்கு சப்ளை செய்ய அந்த கும்பல், திட்டமிட்டு இருந்தது தெரிய வந்தது.
Courtesy:  ndtv
Courtesy:  ndtv
Published on

புதுடெல்லி,

டெல்லியில் இருந்து நியூசிலாந்து, ஆஸ்திரேலியா நாடுகளுக்கு போதை பொருள் கடத்தல் நடைபெறுகிறது என டெல்லி போலீசின் சிறப்பு பிரிவு மற்றும் போதை பொருள் கட்டுப்பாட்டு வாரியத்தின் கூட்டு படையினருக்கு தகவல் தெரிய வந்தது.

இதனை தொடர்ந்து, 4 மாதங்களாக நடந்த தொடர் விசாரணையில், டெல்லியில் இருந்து மீண்டும் இதுபோன்ற மற்றொரு சம்பவம் நடைபெற உள்ளது என தெரிய வந்தது.

இந்த முறை, போதை பொருட்கள் ஆஸ்திரேலியாவுக்கு கடத்தப்பட இருந்தன. இதனையடுத்து, நடந்த அதிரடி விசாரணையில், மேற்கு டெல்லியின் பசாய் தாராப்பூர் பகுதியில் உள்ள குடோன் ஒன்றில் சந்தேகத்திற்குரிய கும்பலை அடையாளம் கண்ட அதிகாரிகள் அவர்களை விசாரித்தனர். அந்த குடோனில் இருந்த கும்பல், சூடோஎபிடிரைன் என்ற போதை பொருளை கடத்தலுக்கு பயன்படுத்த தயாராக இருந்தது.

அந்த கும்பல், உடலுக்கு ஊட்டச்சத்து அளிக்கும் சத்துமாவில் அவற்றை கலந்து கொண்டு இருந்தது. இவற்றை பாக்கெட்டுகளாக அடைத்து வெளிநாடுகளுக்கு சப்ளை செய்ய திட்டமிட்டு இருந்தது தெரிய வந்தது. அந்த கும்பலை சேர்ந்த 3 பேரை அதிகாரிகள் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 50 கிலோ ரசாயன பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

அவர்களிடம் நடந்த விசாரணையில், 3 பேரும் தமிழகத்தில் இருந்து வந்தவர்கள் என தெரிய வந்தது. கடந்த 3 ஆண்டுகளாக இதுபோன்று 45 முறை போதை பொருள் கடத்தலில் ஈடுபட்டு உள்ளது. இதுவரை, ரூ.2 ஆயிரம் கோடி சர்வதேச சந்தை மதிப்பு கொண்ட 3,500 கிலோ எடையுள்ள போதை பொருட்கள் கடத்தப்பட்டு உள்ளன.

சூடோஎபிடிரைன் என்ற இந்த ரசாயன பொருளானது மெத்தம்பெடமைன் என்ற போதை பொருளை உருவாக்க பயன்படும் முக்கிய ரசாயன பொருளாகும். மெத் அல்லது கிறிஸ்டல் மெத் என்றும் அழைக்கப்படுகிறது. உலக அளவில் அதிகம் தேவைப்படும் ஒன்றாக உள்ள இந்த போதை பொருள் 1 கிலோ ரூ.1.5 கோடி வரை விற்பனையாக கூடியது.

இந்த 3 பேர் கும்பலை பின்புலத்தில் இருந்து இயக்கியவர் பிரபல தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் என தெரிய வந்துள்ளது. அவரை கைது செய்யும் நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது என்று அதிகாரி ஒருவர் கூறினார்.

இவற்றை வாங்க கூடிய நபர்களை கைது செய்யும் நடவடிக்கையாக நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அதிகாரிகளையும் தொடர்பு கொண்டிருக்கிறோம் என இந்திய அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com