கள நிலவரத்தை ஆய்வு செய்ய எதிர்க்கட்சிகளின் 'இந்தியா' கூட்டணி எம்.பி.க்கள் மணிப்பூர் பயணம்...!


கள நிலவரத்தை ஆய்வு செய்ய எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் மணிப்பூர் பயணம்...!
x
தினத்தந்தி 29 July 2023 6:52 AM GMT (Updated: 29 July 2023 6:58 AM GMT)

மணிப்பூரில் 2 மாதங்களுக்கு மேலாக கலவரம் நீடித்து வருகிறது.

டெல்லி,

மணிப்பூரில் மெய்தி, குக்கி இனக்குழுக்களுக்கு இடையே கடந்த 2 மாதங்களுக்கு மேலாக வன்முறை நீடித்து வருகிறது. கடந்த மே 3-ம் தேதி தொடங்கிய இந்த வன்முறையில் இதுவரை 150-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். வன்முறையை கட்டுப்படுத்த துணை ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, மணிப்பூர் வன்முறையில் இரு சமூகத்திலும் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அரங்கேறியுள்ளன. அந்த வகையில் கடந்த மே 4ம் தேதி ஆண்கள் கும்பலால் குகி சமூகத்தை சேர்ந்த 2 பெண்கள் நிர்வாணமாக அழைத்து செல்லப்பட்டு பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ கடந்த சில நாட்களுக்கு முன் வெளியாகி நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இந்த விவகாரம் பூதாகரமான நிலையில் நாடாளுமன்றத்தில் மணிப்பூர் விவகாரம் குறித்து விவாதிக்க வேண்டுமென கோரிக்கை விடுத்து எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வருகின்றன.

இந்நிலையில், எதிர்க்கட்சிகளின் எம்.பி.க்கள் இன்று மணிப்பூர் செல்கின்றனர். வன்முறையால் பாதிக்கப்பட்டுள்ள மணிப்பூரில் களநிலவரத்தை ஆய்வு செய்ய எதிர்க்கட்சிகளின் 'இந்தியா' கூட்டணி எம்.பி.க்கள் 20 பேர் பயணம் மேற்கொண்டுள்ளனர். இந்தியா கூட்டணியில் உள்ள 16 கட்சிகளை சேர்ந்த 20 எம்.பி.க்கள் இன்று டெல்லியில் இருந்து விமானம் மூலம் மணிப்பூர் செல்கின்றனர்.

அவர்கள் அனைவரும் இன்றும், நாளையும் மணிப்பூரில் வன்முறை நடைபெற்ற பகுதிகளில் கள ஆய்வு மேற்கொள்கின்றனர். ஆய்வுக்கு பின்னர், எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அனைவரும் நாளை மணிப்பூர் கவர்னரை சந்திக்க உள்ளனர்.

மணிப்பூர் பயணத்தை முடித்த பின் டெல்லி திரும்பும் எம்.பி.க்கள் கள ஆய்வில் பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்த அனுமதி கோர உள்ளனர். நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்த அனுமதி மறுக்கப்படும் பட்சத்தில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அனைவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்து மணிப்பூர் கள நிலவரம் குறித்து நாட்டு மக்களிடம் தெரிவிக்க உள்ளனர்.

மணிப்பூர் செல்லும் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் குழுவில் காங்கிரஸ் எம்.பி. ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. சுஷ்மிதா தேவ், திமுக எம்.பி. கனிமொழி, விடுதலை சிறுத்தைகள் எம்.பி. ரவிக்குமார் உள்பட 20 எம்.பி.க்கள் இடம்பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story