இந்தியா முழுவதும் 2 சதவீத கொரோனா நோயாளிகள் மட்டுமே சிகிச்சையில் உள்ளனர்


இந்தியா முழுவதும் 2 சதவீத கொரோனா நோயாளிகள் மட்டுமே சிகிச்சையில் உள்ளனர்
x
தினத்தந்தி 16 Jan 2021 11:57 PM GMT (Updated: 16 Jan 2021 11:57 PM GMT)

இந்தியாவில் வெறும் 2 சதவீத கொரோனா நோயாளிகள் மட்டுமே சிகிச்சை பெற்று வருகின்றனர்.

புதுடெல்லி,

இந்தியா முழுவதும் கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி போடும் பணிகள் நேற்று தொடங்கி இருக்கிறது. ஆனால் இந்த தடுப்பூசி பயன்பாட்டுக்கு வருவதற்கு முன்னரே நாட்டில் கொரோனாவின் வேகம் கட்டுப்படுத்தப்பட்டு உள்ளது. அமெரிக்கா போன்ற வல்லரசு நாடுகளே கொரோனாவின் கொடூரத்தில் இருந்து இன்னும் விடுபடாதபோது, இந்தியா வேகமாக மீண்டு வருவது மகிழ்ச்சியளிக்கும் செய்தியாகும். மத்திய-மாநில அரசுகளின் வீரியம் மிகுந்த தடுப்பு நடவடிக்கைகளே இத்தகைய சாதனையை எட்டுவதற்கு காரணமாகி வருகிறது.

இதைப்போல நாட்டின் வலுவான மருத்துவ கட்டமைப்பு மற்றும் தரமிக்க சிகிச்சைகளின் பலனாக கொரோனா நோயாளிகள் பெரும்பாலும் குணமடைந்து வீடு திரும்பி வருகின்றனர். இதனால் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு உள்ள மற்றும் வீடுகளில் சிகிச்சையில் இருக்கும் கொரோனோ நோயாளிகளின் எண்ணிக்கை வேகமாக சரிந்து வருகிறது.

நேற்று காலை நிலவரப்படி வெறும் 2 சதவீத நோயாளிகள் மட்டுமே சிகிச்சையில் இருந்தனர். அதாவது வெறும் 2 லட்சத்து 11 ஆயிரத்து 33 நோயாளிகளுக்கு மட்டுமே மருத்துவமனைகள் மற்றும் வீடுகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இது உலக அளவில் மிகவும் குறைந்த விகிதங்களில் ஒன்றாகும். புதிய பாதிப்புகள் சரிவு மற்றும் வேகமான குணமடைதல் போன்ற காரணங்களால் நோய் தொற்றில் இருந்து நாடு வேகமாக விடுபட்டு வருகிறது.

இந்தியாவின் புதிய பாதிப்புகள் தொடர்ந்து சரிந்து வரும் நிலையில், நேற்றும் அது நீடித்தது. குறிப்பாக புதிய பாதிப்புகள் 20 ஆயிரத்துக்கு கீழே என்ற நிலையை ஏற்கனவே நாடு எட்டியிருந்த நிலையில், நேற்றும் அது நீடித்திருந்தது.நேற்று காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் வெறும் 15 ஆயிரத்து 158 பேருக்கு மட்டுமே தொற்று கண்டறியப்பட்டு இருந்தது. இவர்களையும் சேர்த்து இந்தியாவின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1 கோடியே 5 லட்சத்து 42 ஆயிரத்து 841 ஆகியிருக்கிறது.

இதைப்போல மேற்படி 24 மணி நேரத்தில் 175 பேர் கொரோனாவால் மரணத்தை தழுவியிருக்கின்றனர். இதனால் மொத்த மரண எண்ணிக்கை 1 லட்சத்து 52 ஆயிரத்து 93 ஆக அதிகரித்து விட்டது. எனினும் இந்த விகிதம் 1.44 ஆகவே நீடிப்பது கவனிக்கத்தக்கது.

இதற்கிடையே நேற்று காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் மேலும் 16,977 பேர் குணமடைந்து வீடு திரும்பியிருக்கிறார்கள். புதிய பாதிப்புகளை விட, புதிதாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், அது நேற்றும் தொடர்ந்திருக்கிறது.

மேற்படி 24 மணி நேரத்தில் குணமடைந்தவர்களையும் சேர்த்து, இந்தியாவில் இதுவரை 1 கோடியே 1 லட்சத்து 79 ஆயிரத்து 715 பேர் தொற்றில் இருந்து மீண்டிருக்கின்றனர். இது மொத்த பாதிப்பில் 96.56 சதவீதம் ஆகும்.

நாடு முழுவதும் இதுவரை மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனைகளின் எண்ணிக்கை 18 கோடியே 57 லட்சத்து 65 ஆயிரத்து 491 ஆக அதிகரித்து இருக்கிறது. இதில் நேற்று முன்தினம் நடந்த 8 லட்சத்து 3 ஆயிரத்து 90 பரிசோதனைகளும் அடங்கும்.

இந்தியாவில் கொரோனாவால் அதிக உயிரிழப்புகளை சந்தித்த மாநிலங்களின் பட்டியலில் மராட்டியம் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறது. அங்கு நேற்று காலை வரை 50 ஆயிரத்து 336 பேர் இந்த கொடிய தொற்றுக்கு பலியாகி இருக்கின்றனர்.

அடுத்ததாக தமிழ்நாடு, கர்நாடகா ஆகிய மாநிலங்கள் 12 ஆயிரத்துக்கு மேற்பட்ட உயிரிழப்புகளையும், டெல்லி, மேற்கு வங்காளம் மாநிலங்கள் 10 ஆயிரத்துக்கு மேற்பட்ட மரணங்களையும், உத்தரபிரதேசம், ஆந்திரா, பஞ்சாப் ஆகிய மாநிலங்கள் முறையே 8,558, 7,139, 5,485 மரணங்களையும் கொண்டிருக்கின்றன.  இந்த தகவல்களை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டு உள்ளது.

Next Story