தீய சக்திகளை கண்டுகொள்ள வேண்டாம்: புதுச்சேரியில் மீண்டும் ஆட்சியை பிடிப்போம்; புதுச்சேரி முன்னாள் முதல்- அமைச்சர் ரங்கசாமி சூளுரை


என்.ஆர். காங்கிரஸ் கட்சியின் ஆண்டு விழாவில் முன்னாள் முதல்- அமைச்சர் ரங்கசாமி பேசிய போது எடுத்த படம்.
x
என்.ஆர். காங்கிரஸ் கட்சியின் ஆண்டு விழாவில் முன்னாள் முதல்- அமைச்சர் ரங்கசாமி பேசிய போது எடுத்த படம்.
தினத்தந்தி 7 Feb 2021 7:43 PM GMT (Updated: 7 Feb 2021 7:43 PM GMT)

தீயசக்திகளை கண்டுகொள்ள வேண்டாம் என்றும் புதுவையில் என்.ஆர்.காங்கிரஸ் மீண்டும் ஆட்சி அமைக்கும் என்றும் ரங்கசாமி பேசினார்.

ஆண்டுவிழா
என்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் ஆண்டு விழா கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் நேற்று கொண்டாடப்பட்டது. இதைத்தொடர்ந்து கட்சி அலுவலகத்தில் முன்னாள் முதல்-அமைச்சரும் கட்சியின் நிறுவன தலைவருமான ரங்கசாமி கட்சிக்கொடியை ஏற்றினார். தொடர்ந்து அவர் தலைவர்களின் படங்களுக்கு மரியாதை செலுத்தி தொண்டர்களுக்கு இனிப்பு வழங்கினார்.

இதைத்தொடர்ந்து தொண்டர்கள் மத்தியில் ரங்கசாமி பேசியதாவது:-
என்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் 11-வது ஆண்டுவிழா ஒரு முக்கியமான நேரத்தில் கொண்டாடப்படுகிறது. ஏனென்றால் நாம் இப்போது சட்டமன்ற தேர்தலை சந்திக்க உள்ளோம். இந்த நேரத்தில் கட்சி தொடங்கியபோது நம்மோடு இருந்தவர்களை நினைத்துப்பார்க்க வேண்டும். அப்போது இருந்த உத்வேகம் நம்மிடம் இருக்கவேண்டும். புதுவையில் ஒரு நல்ல ஆட்சியை கொண்டுவர உங்கள் ஆதரவு தொடர வேண்டும்.

மீண்டும் ஆட்சியை பிடிக்க...
புதுவை மக்களுக்கு நாம் நல்லாட்சி தரவேண்டும். நாம் கட்சி தொடங்கியதும் நல்ல வளர்ச்சி இருந்தது. நமக்கு ஒரு பெரிய இழப்பு நமது பொதுச்செயலாளர் பாலன் இப்போது நம்மிடையே இல்லை. அவர் கட்சி வளர்ச்சிகாக பாடுபட்டார். எனது நல்ல நண்பர். அவரது எண்ணம் எப்படி இருந்தது? 2021 தேர்தலில் நாம் மீண்டும் வெற்றிபெற்று ஆட்சியை பிடிக்க வேண்டும் என்று அவர் என்னிடம் வலியுறுத்திக் கொண்டே இருந்தார்.

உங்கள் ஆதரவோடு நாம் மீண்டும் ஆட்சியை பிடிப்போம். என்.ஆர்.காங்கிரஸ் ஆட்சி வரவேண்டும் என்ற அடிப்படையில் இப்போது தேர்தலை சந்திக்க உள்ளோம். ஆட்சியை பிடிக்க உறுதியாக ஒரு சபதம் ஏற்கவேண்டும். அது என்ன? நாம் ஒற்றுமையாக இருக்கவேண்டும். நம்மிடையே உள்ள கருத்து வேறுபாடுகளை மறந்து செயல்பட வேண்டும். ஆளுகின்ற திறமையற்ற ஆட்சியாளர்களை, இந்த மோசமான ஆட்சியை நீக்கிவிட்டு நமது ஆட்சியை கொண்டுவர முயற்சி எடுக்கவேண்டும். அந்த எண்ணத்தில் தேர்தலை சந்திக்க வேண்டும்.

ஆட்சியாளர்களிடம் எதைக்கேட்டாலும் தெரியாது என்கிறார்கள். 100-க்கும் மேற்பட்ட வாக்குறுதிகளை தேர்தல் அறிக்கையில் கொடுத்தார்கள். எதையாவது நிறைவேற்றினார்களா? சட்டமன்றத்தை சுற்றி அடைத்து வைத்துள்ளனர். மக்கள் தங்கள் குறைகளை சொல்ல சட்டமன்றத்துக்கு செல்ல முடியவில்லை. ஆட்சியாளர்களே ரோட்டில் படுத்து போராட்டம் நடத்துகிறார்கள்.

பழிபோட்டு...
சாலைகள் மிகவும் மோசமாக உள்ளது. யாரும் போக முடியவில்லை. தமிழ்நாட்டை பார்த்து ஏங்கும் நிலை இப்போது ஏற்பட்டுள்ளது. புயல் அடித்தது. கனமழை பெய்தது. ஏதாவது நிவாரணம் தந்தார்களா? முதல்-அமைச்சர் 85 சதவீத வாக்குறுதிகளை நிறைவேற்றிவிட்டோம் என்கிறார். ஆனால் திட்டங்களை நிறைவேற்ற முடியவில்லை என்று கவர்னர் மீது பழிபோட்டு போராட்டம் நடத்துகிறார். இப்படி மாறுபட்ட நிலையில் பேசிவருகிறார். மாநில அந்தஸ்து கேட்டு தொடங்கப்பட்ட இயக்கம் என்.ஆர்.காங்கிரஸ். அப்போது முதல்-அமைச்சர் நாராயணசாமி சிறப்பு மாநில அந்தஸ்து கேட்டார். ஆனால் இப்போது அதிகாரம் இல்லை என்கிறார். 

மாநில அந்தஸ்து கேட்டு நாங்கள் பல தீர்மானங்களை போட்டுள்ளோம். முதலில் புதுவைக்கு தனிக்கணக்கு தொடங்க முன்பிருந்த காங்கிரஸ் அரசுதான் கூறியது. மானியத்தையும் 30 சதவீதமாக குறைத்தனர். நீதிமன்றம் வரை சென்று கவர்னருக்குத்தான் அதிகாரம் உள்ளது என்பதை முதல்-அமைச்சர் நிரூபித்துள்ளார்.

தேர்தல் புறக்கணிப்பு
புதுவையில் எத்தனையோ கட்சிகள் உள்ளது. நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து மாநில அந்தஸ்து தந்தால்தான் தேர்தலில் போட்டியிடுவோம். இல்லையெனில் தேர்தலை புறக்கணிப்போம் என்று முடிவு எடுப்போமா? அதற்கு வரத்தயாரா? நாள்தோறும் போராட்டம் என்று கூறி புதுவையை வீணடித்துள்ளார்கள். எம்.எல்.ஏ.க்களுக்கு 3 ஆண்டுகளாக தொகுதி மேம்பாட்டு நிதி வழங்கவில்லை. அடிப்படை வசதியின்றி மாநிலம் சீரழிகிறது. ஹெல்மெட் உத்தரவு காரணமாக மக்கள் அலைக்கழிக்கப்பட்டனர். அந்த உத்தரவினை யார் போட்டது? என்று தெரியாத ஆட்சி இருக்கவேண்டுமா? ஆட்சியை மாற்றும் எண்ணம் மக்களிடம் வந்துவிட்டது. 

நல்லாட்சி தர நாங்கள் எப்போதும் உங்களோடு உள்ளோம். முதல்-அமைச்சர் நாராயணசாமி சொல்வதை மக்கள் நம்ப தயாரில்லை. அதிகாரிகளை கூப்பிட்டால்கூட அவர்கள் வருவதில்லை. இதுதான் இப்போதைய ஆட்சியின் நிலை. என்னை பார்த்து உங்களுக்கு நிர்வாக திறமையில்லை என்று நாராயணசாமி கூறினார். இப்போது யார் திறமையான ஆட்சியாளர் என்பதை மக்கள் புரிந்துகொண்டுள்ளனர்.

தீய சக்திகள்
நாள்தோறும் உண்ணாவிரதம், போராட்டம் என்று ரோட்டில் உருளுகிறார்கள். நிர்வாகம் எப்படி என்பதை தெரிந்து அவர்கள் செயல்பட வேண்டும். 5 ஆண்டில் எத்தனை பேருக்கு வேலைவாய்ப்பு தந்தீர்கள்? 

ஒரு தொழிற்சாலையாவது புதியதாக வந்ததா? டிசம்பருக்குள் 5 ஆயிரம் பேருக்கு அரசு வேவைவாய்ப்பு என்றீர்களே ஒருவருக்காவது வேலை கொடுத்தீர்களா? வேலையில் இருந்தவர்களையும் அதிலிருந்து எடுத்துவிட்டார்கள். பஞ்சாலைகளை மூடிவிட்டார்கள்.

நாங்கள் கட்டியதை இப்போது திறந்து வைக்கிறார்கள். தாழ்த்தப்பட்ட மக்களுக்கு 16 சதவீத நிதியை ஒதுக்கி தந்ததே நான்தான். கடந்த 5 ஆண்டுகளாக இவர்கள் எதையாவது செய்வார்கள் என்று காத்திருந்தோம். ஆனால் ஒன்றும் செய்யவில்லை. நாம் ஒற்றுமையாக இருந்து இந்த தேர்தலை சந்திக்க வேண்டும். அதிக இடங்களை பிடிக்கவேண்டும். அதில் சிலர் குழப்பம் விளைவிப்பார்கள்.  வெளியில் இருந்தும் சில தீயசக்திகள் ஒற்றுமையை சீர்குலைப்பார்கள். அதை நாம் மனதில் வைக்கவேண்டாம். புதுவை மக்கள் நமக்கு வாக்களிக்க காத்துக்கொண்டுள்ளனர்.

கருப்பு சட்டை
ஹெல்மெட் விவகாரத்தில் அதிகாரிகள் மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். இப்போது காங்கிரஸ் கட்சிக்காரர்கள் கருப்பு சட்டை அணிந்து போராடுவதை என்னால் நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை. நாம் வெற்றிபெற்று ஆட்சியை அமைக்க பாடுபட வேண்டும்.

இவ்வாறு ரங்கசாமி பேசினார்.

விழாவில் கோபிகா எம்.எல்.ஏ.,பொருளாளர் வேல்முருகன், முன்னாள் கவுன்சிலர் மாரிமுத்து, வக்கீல் பூவரசன் உள்பட கட்சி எம்.எல்.ஏ.க்கள், நிர்வாகிகள் பலரும் கலந்துகொண்டனர்.

Next Story