ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கு சரத்பவார் தலைவராக வேண்டும்; சிவசேனா கருத்துக்கு காங்கிரஸ் கடும் எதிர்ப்பு


ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கு சரத்பவார் தலைவராக வேண்டும்; சிவசேனா கருத்துக்கு காங்கிரஸ் கடும் எதிர்ப்பு
x
தினத்தந்தி 26 March 2021 12:17 AM GMT (Updated: 26 March 2021 12:17 AM GMT)

ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தலைமை பொறுப்பை சரத்பவார் ஏற்க வேண்டும் என்று சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் கூறினார். இதற்கு காங்கிரஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளது.

சரத்பவார்

ஐக்கிய முற்போக்கு கூட்டணி கட்சிகளின் தலைவராக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி இருந்து வருகிறார். இந்தநிலையில் அந்த கூட்டணி தலைவராக சரத்பவார் போன்ற காங்கிரஸ் அல்லாதவர்கள் நியமிக்கப்பட வேண்டும் என்று சிவசேனா கூறியுள்ளது.

இது குறித்து அக்கட்சியின் எம்.பி.யான சஞ்சய் ராவத் டெல்லியில் நேற்று நிருபர்களிடம் கூறும்போது, ஐக்கிய முற்போக்கு கூட்டணி முடங்கி போய் உள்ளது. எனவே அந்த கூட்டணி தலைவராக தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் போன்ற காங்கிரஸ் அல்லாதவர்கள் பொறுப்பு ஏற்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன்" என்றார்.

அப்போது குறிக்கிட்ட நிருபர் ஒருவர், உங்களது கோரிக்கையை கூட்டணியின் மற்ற கட்சிகள் ஏற்றுக்கொள்ளுமா? என்று கேட்டார். அதற்கு பதிலளித்த சஞ்சய் ராவத், இதற்கு மாநில கட்சிகள் எதுவும் ஆட்சேபனை தெரிவிக்காது என நான் நினைக்கவில்லை. ஆனால் அனைவரும் பா.ஜனதாவுக்கு எதிராக ஓரணியில் உள்ளனர்" என்றார்.

காங்கிரஸ் எதிர்ப்பு

ஆனால் சிவசேனா எம்.பி.யின் இந்த கருத்துக்கு காங்கிரஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளது. இது குறித்து மராட்டிய காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் சச்சின் சாவந்த் கூறுகையில், "ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் சிவசேனா அங்கம் வகிக்கவில்லை. மராட்டிய அளவில் மட்டும் தான் எங்களது கூட்டணி உள்ளது. இந்தநிலையில் இதுபோன்ற கருத்துகளை வெளியிடுவதை சஞ்சய் ராவத் தவிர்க்க வேண்டும்" என்றார்.

மற்றொரு காங்கிரஸ் மூத்த தலைவரான ஹூசேன் தல்வாய் கூறுகையில், "சிவசேனா தலைமையிலான கூட்டணி அரசுக்கு காங்கிரஸ் ஆதரவு அளித்து வருகிறது என்பதை அக்கட்சி மறந்து விடக்கூடாது. இதுபோன்ற கருத்துக்களை கூறி குழப்பத்தை ஏற்படுத்த வேண்டாம்" என்றார்.

இதுபோன்ற கருத்தை சமீபத்தில் சஞ்சய் ராவத் கூறியிருந்ததும், அதற்கு காங்கிரஸ் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்ததும் நினைவுக்கூரத்தக்கது.


Next Story