தி.மு.க., காங்கிரஸ் கூட்டணி ஆட்சி மூலம் புதுச்சேரியிலும் தமிழக திட்டங்கள் நிறைவேற்றப்படும்; தேர்தல் பிரசாரத்தில் மு.க.ஸ்டாலின் உறுதி
தி.மு.க., காங்கிரஸ் கூட்டணி ஆட்சி மூலம் தமிழக திட்டங்கள் புதுச்சேரியிலும் நிறைவேற்றப்படும் என்று தேர்தல் பிரசாரத்தில் மு.க.ஸ்டாலின் கூறினார்.
புதுவையில் காங்கிரஸ், தி.மு.க., இந்திய கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள் கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று வாக்குசேகரித்தார். இதற்காக ரோடியர் மில் திடலில் பிரமாண்ட மேடை அமைக்கப்பட்டிருந்தது.அந்த மேடையில் கூட்டணி கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் இருந்தனர். அதற்கு அருகில் பிரசார வேனில் நின்றபடி மு.க.ஸ்டாலின் தேர்தல் பிரசார உரையாற்றினார்.
அப்போது அவர் பேசியதாவது:-
மக்களுக்கு தொல்லைபுதுவை சட்டமன்ற தேர்தலுக்கு மக்களிடம் வாக்குகேட்டு வந்துள்ளேன். தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் நான் பிரசாரம் செய்துள்ளேன். வருகிற 6-ந்தேதி நடக்கும் தேர்தலில் நமது கூட்டணி கட்சி வேட்பாளர்களை நீங்கள் வெற்றிபெற செய்யவேண்டும்.பெரியார், கருணாநிதி சந்திப்பினை நிகழ்த்திய இடத்துக்கு நான் வந்துள்ளேன். தமிழக சட்டமன்ற தேர்தலில் மதச்சார்பற்ற கூட்டணி மிகப்பெரிய வெற்றி பெறும். அதேபோன்ற வெற்றியை புதுவையிலும் நீங்கள் தரவேண்டும்.மத்தியில் ஆளும் பா.ஜ.க.வினர் கடந்த 5 வருடமாக கவர்னரை வைத்துக்கொண்டு காங்கிரஸ்-தி.மு.க. ஆட்சிக்கு தொல்லை கொடுத்தனர். அது தனிப்பட்ட முறையில் கட்சிகளுக்கான தொல்லை இல்லை. புதுவை மக்களுக்கான தொல்லை என்பதை நீங்கள் மறந்துவிடக்கூடாது.
பனங்காட்டு நரிஅந்த பா.ஜ.க.வை நீங்கள் புதுவைக்குள் விடலாமா? அவர்களுக்கு முடிவு கட்டுவீர்களா? தமிழகத்தில் தி.மு.க. வெற்றிபெற்று ஆட்சி அமைக்கும் என்று கருத்து கணிப்புகள் தொடர்ந்து வருகின்றன.இதனால் ஏற்பட்ட ஆத்திரத்தின் உச்சத்துக்குப்போய் நமது கட்சி தோழர்களை சோர்வடைய செய்ய வருமான வரி சோதனை நடத்துகிறார்கள். எனது மகள் வீட்டிலும் சோதனை நடத்தினார்கள். அற்காக நான் கவலைப்படமாட்டேன். ஒரு வாரத்துக்கு முன்பு எ.வ.வேலு, செந்தில்பாலாஜி வீடு, அலுவலகங்களில் சோதனை நடத்தினார்கள். இதையெல்லாம் பார்த்து நாங்கள் பயப்படமாட்டோம். தி.மு.க. பனங்காட்டு நரி. இந்த புதுவை மாநிலத்துக்கு பா.ஜ.க. என்ன செய்தது? கவர்னர் கிரண்பெடியை வைத்து முதல்-அமைச்சராக இருந்த நாராயணசாமிக்கு தொல்லை கொடுத்தது. மக்கள் நல திட்டங்களை செய்யவிடாமல் தடுத்தனர். ரேசன் கடைகளை மூடி பொருட்கள் தரவிடவில்லை. அரசு அதிகாரிகளை செயல்படவில்லை.
மோடியின் வேலைஅதன்பின் சமீபத்தில் மக்கள் வெறுத்ததால் கவர்னரை நீக்கினார்கள். அவரை நீக்கிவிட்டால் பழையதை மக்கள் மறந்து விடுவார்கள் என்று நினைக்கிறார்கள். தொல்லை கொடுத்த பா.ஜ.க.வை நீங்கள் மறப்பீர்களா? கடந்த 2 மாதமாக அமைச்சர்களை, சபாநாயகரை, கட்சி நிர்வாகிகளை மிரட்டினார்கள். இந்த தேர்தலுக்கு என்.ஆர்.காங்கிரஸ், அ.தி.மு.க., பா.ஜ.க. ஆகியோர் கூட்டணி அமைத்துள்ளனர். இது கொள்கை கூட்டணியா? ஒற்றுமை கூட்டணியா? 3 பேருக்கும் ஒரே செயல்பாடுதான். அதாவது நம்ப வைத்து ஏமாற்றுவதுதான். மோடியின் வேலையே பா.ஜ.க. ஆட்சி இல்லாத மாநிலங்களில் யாரும் நிம்மதியாக ஆட்சி நடத்தக்கூடாது என்பதுதான். அவர் பிரதமர் ஆனது முதல் பெரும்பான்மையாக இருக்கும் ஆட்சிகளை கலைத்தார்கள். அதற்கான பெரிய பட்டியலே என்னிடம் உள்ளது. அருணாசலபிரதேசம், கோவா, மணிப்பூர், மேகாலயா, கர்நாடகா, சிக்கிம், மத்திய பிரதேசம், இப்போது புதுச்சேரி.
தலையாட்டி ரங்கசாமிஇந்த தேர்தலில் நாம் மிகப்பெரிய வெற்றி பெற்று மாநில அரசுகளை கலைக்கும் பா.ஜ.க.வை மத்தியில் இருந்து கலைக்கும் நிலை வரவேண்டும். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளை கலைப்பதுதான் மோடியின் கொள்கை. மக்களுக்கு நல்லது செய்து அவர்களிடம் வாக்குகளை பெறவேண்டும். அதை விட்டு விட்டு மிரட்டுகிறார்கள்.புதுவை மாநிலத்தில் கடந்த சட்டமன்ற தேர்தலில் பா.ஜ.க. ஒட்டுமொத்தமாக பெற்ற ஓட்டு எவ்வளவு தெரியுமா? வெறும் 19 ஆயிரம்தான். ஆனால் ரங்கசாமி, அ.தி.மு.க.வை மிரட்டி இப்போது 9 தொகுதிகளில் போட்டியிடுகிறார்கள். அதற்கு ரங்கசாமியும் தலையாட்டி உள்ளார். அ.தி.மு.க.வும் தலையாட்டி உள்ளது. இதேபோல்தான் தமிழகத்தில் பழனிசாமி ஆட்சியும் தலையாட்டியது.
முதல்-அமைச்சர் வேட்பாளரில் குழப்பம்தமிழகத்தில் அவர்கள் அமைத்திருப்பது துரோக கூட்டணி. வேஷ கூட்டணி. நாம் அமைத்து இருப்பது வெற்றி கூட்டணி. அதற்கு நீங்கள் வெற்றி தேடித்தர வேண்டும். தேர்தலில் வெற்றிபெற்றால் நான்தான் முதல்-அமைச்சர் என்று ரங்கசாமி கூறிவருகிறார்.புதுவைக்கு 2 முறை பிரதமர் மோடி வந்து பேசி உள்ளார். அப்போது ரங்கசாமியை முதல்-அமைச்சர் வேட்பாளர் என்று அவர் கூறினாரா? அதில் குழப்பம் உள்ளது. தேர்தல் முடிந்ததும் அவர்கள் என்ன செய்வார்கள் என்று ரங்கசாமி, அ.தி.மு.க.வுக்கு தெரியும்.
சமீபத்தில் தாராபுரம் வந்த பிரதமர் சாதாரண ஆள் பேச முடியாத சொற்களை பேசி உள்ளார். தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று கூறியுள்ளார். 10 வருடமாக தமிழகத்தில் அ.தி.மு.க.தான் ஆட்சியில் உள்ளது. நான் அவருக்கு பதில் கூறினேன். தாரபுரத்திலிருந்து 40 கி.மீ. தூரத்தில் பொள்ளாச்சி இருப்பது அவருக்கு தெரியவில்லையா? அங்கு நடந்தது அவருக்கு தெரியாவிட்டால் பிரதமராக இருக்க லாயக்கில்லை.
பொள்ளாச்சி சம்பவம்பெரிய வீட்டு பிள்ளைகள், அரசு பொறுப்பில் இருப்பவர்களின் வீட்டு பிள்ளைகள் பெண்களை பாலியல் பலாத்காரம் செய்து வீடியோ எடுத்து அச்சுறுத்தி பணம் சம்பாதித்துள்ளனர். அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதில் சி.பி.ஐ. தலையிட்டு அ.தி.மு.க.வைச் சேர்ந்த முக்கிய பிரமுகரை கைது செய்தது. இப்போது தி.மு.க. ஆட்சிக்கு வர உள்ளது. வந்ததும் யாரைவிட்டாலும் அவர்களை விடமாட்டோம்.
சட்டம் ஒழுங்கை பாதுகாக்க வேண்டிய போலீஸ் சூப்பிரண்டுக்கு தலைமை பொறுப்பில் இருக்கும் சிறப்பு டி.ஜி.பி. பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். முதல்-அமைச்சருக்கு வேண்டியவர் என்பதால் அவரை தன் பக்கத்தில் வைத்துள்ளார். இப்படி அசிங்கம் நடப்பது பிரதமருக்கு தெரியவில்லையா?
புதுவை வந்த பிரதமர் மாநில அந்தஸ்து பற்றி பேசினாரா? அரசின் கடன் ரூ.8,200 கோடியை தள்ளுபடி செய்வது பற்றி பேசினாரா? மதுரையில் எய்ம்ஸ் மருத்துவ கல்லூரி அறிவிக்கப்பட்டு 4 வருடம் கழித்து கடந்த 2019 தேர்தலையொட்டி பிரதமர் அடிக்கல் நாட்டினார். அதன்பின் எந்த வேலையும் நடக்கவில்லை.
தமிழக திட்டங்கள்புதுவையை பா.ஜ.க. குறிவைக்க காரணம் உள்ளது. இங்கு ஏராளமான இயற்கை வளம் உள்ளது. சாகர்மாலா திட்டம் மூலம் அபகரிக்க திட்டம் தீட்டி இருப்பது தான் அது. இங்கு முதல்-அமைச்சராக இருந்த நாராயணசாமி அதை தடுத்ததால் அவர்களால் எதுவும் செய்ய முடியவில்லை. அதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
இப்போது நான் தமிழக எதிர்க்கட்சி தலைவராக அல்லாமல் கலைஞரின் மகனாக உங்களிடம் வந்துள்ளேன். தமிழகத்தில் நமது பொற்கால ஆசி மலரப்போகிறது. அங்கு வழங்கப்பட இருப்பதுபோல் இங்கு அமைய உள்ள தி.மு.க., காங்கிரஸ் கூட்டணி ஆட்சி மூலம் இல்லந்தோறும் குடும்ப தலைவிக்கு மாதம் ரூ.1000, மாநில அந்தஸ்து, தனி கல்வி வாரியம், காவிரி நீரில் காரைக்காலுக்கு உரிய பங்கீட்டை பெற்றுத் தருவோம். தமிழகத்துடன் இணைப்பு சாலைகள், பாலங்கள் கட்டப்படும். கலைஞர் உயிரை காப்பாற்றிய இந்த மண்ணின் மீது ஆணையிட்டு கூறுகிறேன். தமிழக திட்டங்கள் அனைத்தும் இங்கும் நிறைவேற்றப்படும். எனவே தி.மு.க., காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்களித்து வெற்றிபெறச் செய்ய வேண்டும்.
இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார்.
பிரசார கூட்டத்தில் முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி, வைத்திலிங்கம் எம்.பி., புதுவை மாநில தி.மு.க. அமைப்பாளர்கள் சிவா எம்.எல்.ஏ., எஸ்.பி.சிவக்குமார் மற்றும் வேட்பாளர்கள் கலந்துகொண்டனர்.