மதவாத கூட்டணி பா.ஜ.க.வை மக்கள் புறக்கணிப்பார்கள்; நாராயணசாமி பேட்டி
மதவாத பா.ஜ.க. அணியை மக்கள் புறக்கணித்து மதசார்பற்ற கூட்டணியை வெற்றிபெறச் செய்வார்கள் என்று நாராயணசாமி கூறினார்.
ஓட்டு போட்டார்
புதுச்சேரி மிஷன் வீதியில் உள்ள சைமன் கர்தினால் லூர்துசாமி அரசு பெண்கள் உயர்நிலைப்பள்ளி வாக்குச்சாவடியில் நேற்று காலை முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி ஓட்டு போட்டார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
இது ஜனநாயக தேர்தல். மதவாத சக்திகளுக்கும், மதசார்பற்ற அணிகளுக்கும் இடையேயான தேர்தல். நாங்கள் மாநில அந்தஸ்து, கடன் தள்ளுபடி, அரசு பணிகளை நிரப்புவது, வளர்ச்சி திட்டங்களை நிறைவேற்றுவது உள்ளிட்ட உறுதிமொழிகளை அளித்து தேர்தல் பிரசாரம் செய்தோம். இதற்கு மக்கள் அமோக வரவேற்பு அளித்தனர். இதனால் எங்கள் கூட்டணி அமோக வெற்றி பெறும்.
சந்தர்ப்பவாத கூட்டணிஅதேநேரத்தில் என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜ.க. மதவாத சந்தர்ப்பவாத கூட்டணி தலைவர்கள் தனித்தனியாக பிரசாரம் செய்தனர். பிரதமர் மோடி மத்திய மந்திரி அமித்ஷா உள்ளிட்டவர்கள் அவர்களது கட்சிக்காக பிரசாரம் செய்தனர். கூட்டணியை மையமாக வைத்து ஆதரவு திரட்டவில்லை.
அதிகாரம், பண பலத்தை வைத்து புதுச்சேரியில் பா.ஜ.க. காலூன்ற பார்க்கிறது. அடக்கு முறைகள், மிரட்டல்கள், வருமான வரி துறைறை ஏவி திட்டமிட்டு வேட்பாளர்கள் வீடுகளில் சோதனை நடத்தினார்கள்.
பா.ஜ.க.வின் இந்த அராஜகத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, புதுவையின் தனித்தன்மையை முடக்கும் மதவாத பா.ஜ.க. அணியை மக்கள் புறக்கணிப்பாளர்கள். கடந்த காலங்களை போல் மக்கள் மதசார்பற்ற கூட்டணிக்கு அமோகமாக வாக்களித்து வெற்றி பெறச் செய்வார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.