மே.வங்க வாக்காளர்களை மம்தா பானர்ஜி இழிவுபடுத்துகிறார்: பிரதமர் மோடி விமர்சனம்


மே.வங்க வாக்காளர்களை மம்தா பானர்ஜி இழிவுபடுத்துகிறார்: பிரதமர் மோடி விமர்சனம்
x
தினத்தந்தி 10 April 2021 3:14 PM GMT (Updated: 10 April 2021 3:14 PM GMT)

கடும் விரக்தியில் உள்ள மம்தா பானர்ஜி வாக்காளர்களையும் இழிவுபடுத்துகிறார் என்று பிரதமர் மோடி விமர்சித்துள்ளார்.

கொல்கத்தா,

294 தொகுதிகளை கொண்ட மேற்குவங்காள சட்டசபைக்கு 8 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. இதுவரை 4 கட்ட தேர்தல்கள் நடைபெற்றுள்ளது. இன்று 4 ஆம் கட்ட தேர்தலின் போது,  கூச்பிகார் மாவட்டத்தில் உள்ள வாக்குச்சாவடி அருகே  நான்கு பேர் பாதுகாப்பு படையினரால் கொல்லப்பட்டனர். 

தவறான புரிதலால் பாதுகாப்பு படையினர் மீது  உள்ளூரை சேர்ந்த கும்பல் தாக்குதல் நடத்த முயற்சித்தது. இதையடுத்து தற்பாதுகாப்புக்காக பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர்.  வாக்குப்பதிவின் போது 4 பேர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்திற்கு  அமித்ஷாவே காரணம் எனக்கூறிய மம்தா பானர்ஜி, அமித்ஷா பதவி விலக வேண்டும் எனக் கூறி வருகிறார். பாஜகவும் பதிலடி கொடுத்து வருகிறது. 

இந்த நிலையில், தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, வாக்காளர்களை மம்தா பானர்ஜி இழிவுபடுத்துவதாக விமர்சித்தார். பிரதமர் மோடி கூறுகையில், “ மக்களின் முன்னாள் யாருடைய ஆணவமும் பலிக்காது. மம்தா பானர்ஜி இதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும். தேர்தல் ஆணையம், பாதுகாப்பு படை, வாக்குப்பதிவு இயந்திரம் ஆகியவை குறித்து அவதூறு பரப்பிய மம்தா பானர்ஜி தற்போது சொந்த கட்சியின் முகவர்களையும் விமர்சிக்கிறார். 

கடும் விரக்தியில் உள்ள மம்தா பானர்ஜி வாக்காளர்களையும் இழிவுபடுத்துகிறார். தேர்தலில் தோல்வியை தவிர்க்க முடியாது என்பதை உண்ர்ந்ததால் வன்முறை தூண்ட முயற்சிக்கிறார்.  தேர்தல் தோல்வியில் இருந்து மம்தாவை காப்பாற்ற முடியாது. இந்த தேர்தல் பாஜகவின் போராட்டம் மட்டுமல்ல, மக்களின் போராட்டம். மம்தாவின் கோபத்திற்கு காரணம் பாஜக மற்றும் மோடி மட்டுமல்ல, அவர் மீதான நம்பிக்கையை முறித்துக் கொண்ட மக்களும் ஒரு காரணம்” என்றார். 


Next Story