தெலுங்கானாவில் தனியார் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்ளுக்கு மாதம் ரூ.2,000, 25 கிலோ அரிசி: அம்மாநில அரசு அறிவிப்பு


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 11 April 2021 12:05 AM GMT (Updated: 11 April 2021 12:09 AM GMT)

தனியார் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்ளுக்கு மாதம் ரூ.2,000 மற்றும் 25 கிலோ அரிசி வழங்கப்படும் என்று தெலுங்கானா அரசு அறிவித்துள்ளது.

ஹைதராபாத், 

கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக, நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் அனைத்து கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டன. பெரும்பாலான கல்வி நிறுவனங்கள் இணையதளம் வழியாக பாடம் நடத்தின. எனினும் ஆசிரியர் மற்றும் ஊழியர்களுக்கு சரியாக சம்பளம் வழங்கப்படவில்லை. சில நிறுவனங்கள் பாதி சம்பளம் வழங்கின. 

இந்நிலையில் பள்ளிகள் திறக்கப்படும் வரை தனியார் பள்ளி ஆசிரியர், ஊழியர்களுக்கு மாதம் ரூ.2,000, 25 கிலோ அரிசி வழங்கப்படும் என்று தெலுங்கானா அரசு அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக தெலுங்கானா முதல்-மந்திரி சந்திரசேகர ராவ் கூறுகையில், 'கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. இதனால், தனியார் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் இதர ஊழியர்கள் வருமானம் இன்றி தவித்து வருகிறார்கள். எனவே, தனியார் பள்ளி ஆசிரியர்கள், ஊழியர்களுக்கு மாதந்தோறும ரூ.2 ஆயிரம் மற்றும் 25 கிலோ அரிசி நியாய விலைக் கடைகள் மூலம் வழங்கப்படும். ஏப்ரல் மாதம் முதல் பள்ளிகள் திறக்கப்படும் வரை இந்த உதவி வழங்கப்படும். மனிதாபிமான அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. 

இதனால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் பள்ளிகளில் பணிபுரியும் சுமார் 50 லட்சம் பேர் பயனடைவார்கள். இந்த உதவியைப் பெற விரும்புவோர், தங்கள் மாவட்ட ஆட்சியருக்கு விண்ணப்பம் அனுப்ப வேண்டும். பணிபுரியும் பள்ளியின் விவரம், வங்கிக் கணக்கு எண் உள்ளிட்ட பல்வேறு தகவல்களுடன் விண்ணப்பிக்க வேண்டும்' என்று அவர் தெரிவித்தார். 

Next Story