கொரோனா தடுப்பு பணிக்குழுவினருடன் முழு ஊரடங்கை அமல்படுத்துவது குறித்து உத்தவ் தாக்கரே ஆலோசனை; நாளை மறுநாள் இறுதி முடிவு எடுக்க வாய்ப்பு


கொரோனா தடுப்பு பணிக்குழுவினருடன் முழு ஊரடங்கை அமல்படுத்துவது குறித்து உத்தவ் தாக்கரே ஆலோசனை; நாளை மறுநாள் இறுதி முடிவு எடுக்க வாய்ப்பு
x
தினத்தந்தி 12 April 2021 3:56 AM GMT (Updated: 12 April 2021 3:56 AM GMT)

மராட்டியத்தில் முழு ஊரடங்கை அமல்படுத்துவது குறித்து கொரோனா தடுப்பு பணிக்குழுவினருடன் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே ஆலோசனை நடத்தினார். இதற்கான இறுதி முடிவு நாளை மறுநாள் எடுக்கப்படும் என தகவல்கள் வெளியாகி உள்ளது.

அனைத்து கட்சியினர் ஆதரவு
மராட்டியத்தில் கொரோனா வைரஸ் அசுர வேகத்தில் பரவி வருகிறது. தினந்தோறும் 50 ஆயிரத்திற்கு மேற்பட்டவர்கள் தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால் சிகிச்சை மையங்கள் நிரம்பி வருகின்றன. இந்தநிலையில் நோய் பரவல் சங்கிலியை உடைக்க முழு ஊரடங்கை மீண்டும் அமல்படுத்த மாநில அரசு திட்டமிட்டுள்ளது.இதுகுறித்து முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே அனைத்து கட்சி தலைவர்களிடமும் ஆலோசனை நடத்தினார். அப்போது பா.ஜனதா உள்ளிட்ட அனைத்து கட்சி தலைவர்களும் நோய் பரவல் சங்கிலியை உடைக்க மாநில அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு ஆதரவு 
தெரிவித்ததாக கூறப்படுகிறது.

முதல்-மந்திரி ஆலோசனை
இந்தநிலையில் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே நேற்று முழு ஊரடங்கை அமல்படுத்துவது தொடர்பாக கொரோனா தடுப்பு பணிக்குழுவினருடன் ஆலோசனை நடத்தினார். அப்போது முழு ஊரடங்கை அமல்படுத்த அவர்கள் ஆதரவு தெரிவித்ததாக கூறப்படுகிறது.இந்த ஆலோசனை கூட்டம் குறித்து முதல்-மந்திரி அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே கொரோனா தடுப்பு பணிக்குழுவினருடன் ஆலோசனை நடத்தினார். அப்போது அவர் ஆக்சிஜன் மற்றும் படுக்கைகள் இருப்பு விவரம், ரெம்டெசிவிர் மருந்து பயன்பாடு, சிகிச்சை முறை நெறிமுறைகள், வசதிகளை மேம்படுத்துவது, கொரோனா வழிகாட்டு நெறிமுறை மீறல்களுக்கு அபராதம் மற்றும் கட்டுப்பாடுகள் விதிப்பது குறித்து ஆலோசனை நடத்தினார்” என கூறப்பட்டுள்ளது.

முழு ஊரடங்கு விவரம்
இதற்கிடையே முழு ஊரடங்கை அமல்படுத்த மாநில அரசு முடிவு செய்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. முழு ஊரடங்கு 8, 15 அல்லது 21 நாட்களுக்கு இருக்கலாம் என தெரிகிறது. இதுகுறித்த இறுதி முடிவை முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே நாளை மறுநாள் (புதன்கிழமை) மந்திரி சபையை கூட்டி எடுப்பார் என தகவல்கள் வெளியாகி உள்ளன.இதுகுறித்து மாநில மந்திரி அஸ்லாம் சேக் கூறுகையில், ‘‘சிலர் 3 வார ஊரடங்கிற்கு ஆதரவாக உள்ளனர். அதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் வழிகாட்டுதல்கள் பற்றி ஆலோசிக்கப்பட்டது. இதற்கான கூட்டம் நாளையும் (இன்று) நடைபெறும்" என்றார்.

Next Story