ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளுடன், மத்திய படைகளை அவமதிக்க வேண்டாம் மம்தா பானர்ஜிக்கு பிரதமர் மோடி வேண்டுகோள்


ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளுடன், மத்திய படைகளை அவமதிக்க வேண்டாம் மம்தா பானர்ஜிக்கு பிரதமர் மோடி வேண்டுகோள்
x
தினத்தந்தி 12 April 2021 7:52 AM GMT (Updated: 12 April 2021 7:52 AM GMT)

ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளுடன், மத்திய படைகளை அவமதிக்க வேண்டாம் என முதல்வர் மம்தா பானர்ஜியிடம் பிரதமர் மோடி கேட்டு கொண்டார்.

கொல்கத்தா

5 மாநில சட்டசபை தேர்தல் களத்தில் அனல் பறக்கும் பிரதேசமாக மேற்கு வங்காளம் மாறியிருக்கிறது. அங்கு ஆளும் திரிணாமுல் காங்கிரசும், பா.ஜனதாவும் நேருக்குநேர் மல்லுக்கட்டி வருகின்றன.

இந்த பரபரப்பான சூழலில் நேற்று முன்தினம் அங்கு 4-வது கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் கூச் பெஹார் மாவட்டத்தின் சிட்டல்குச்சியில் உள்ள வாக்குச்சாவடி ஒன்றில் பெரும் வன்முறை மூண்டது.

அப்போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த மத்திய படையினர் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் குண்டுபாய்ந்து 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் பலர் காயமடைந்தனர்.

அங்கு தகராறு நடந்தபோது மத்திய படையினரை உள்ளூர்வாசிகள் ஏராளமான எண்ணிக்கையில் சூழ்ந்து கொண்டு மிரட்டியதுடன், அவர்களது துப்பாக்கிகளை பறித்ததால், தற்காப்புக்காக பாதுகாப்பு படையினர் இந்த துப்பாக்கிச்சூட்டில் இறங்கியதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

நாடு முழுவதும் மிகப்பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ள இந்த சம்பவம் தொடர்பாக தேர்தல் கமிஷன் அறிக்கை கேட்டுள்ளது. மேலும் சம்பவம் நடந்த கூச் பெஹார் மாவட்டத்தில் அரசியல்வாதிகள் நுழைய 72 மணி நேர தடையும் விதித்து உள்ளது.

இதற்கு மாநில முதல்-மந்திரியும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி கடும் கண்டனம் தெரிவித்தார். இது குறித்து அவர் கூறும் போது 

சிட்டல்குச்சியில் ஒரு இனப்படுகொலை அரங்கேற்றப்பட்டு உள்ளது. மக்களின் உடலை குறிவைத்து மத்திய படைகள் துப்பாக்கி தோட்டாக்களை வீசியிருக்கிறார்கள்.

சூழ்நிலையை எப்படி கையாள வேண்டும் என்பது மத்திய படைகளுக்கு தெரியவில்லை. மத்திய படைகளில் ஒரு பிரிவினர் மக்கள் மீது வன்முறைகளை கட்டவிழ்த்து விடுகிறார்கள் என்று முதற்கட்ட வாக்குப்பதிவில் இருந்தே நான் கூறி வருகிறேன்.

நந்திகிராமில் இதை நான் கண்டுபிடித்தும் கூறினேன். ஆனால் யாரும் அதற்கு செவிமடுக்கவில்லை. நமக்கு ஒரு தகுதியற்ற உள்துறை மந்திரியும், தகுதியற்ற மத்திய அரசும் வாய்த்திருக்கிறார்கள். வருகிற 14-ந் தேதிக்குள் சிட்டல்குச்சிக்கு செல்ல விரும்புகிறேன். ஆனால் கூச் பெஹாருக்குள் நுழை தடை விதித்ததன் மூலம் தேர்தல் கமிஷன் உண்மைகளை மறைக்க முயற்சிக்கிறது என கூறினார்.

இதற்கு  பிரதமர் மோடி இன்று பதில் அளித்து உள்ளார். 

ஐந்தாவது கட்ட தேர்தலுக்காக மேற்கு வங்காளத்தின் பர்தமான் மாவட்டத்தில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டு  பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றிய போது கூறியதாவது:-

முதல்  4 கட்ட வாக்கெடுப்புகளில் திரிணாமுல் காங்கிரஸ் தூக்கி எறியப்பட்டு  விட்டது. தீதியின் கசப்பும், கோபமும் தினமும் அதிகரித்து வருகின்றன. நீங்கள் பல பவுண்டரிகள் மற்றும் சிக்ஸர்களை அடித்திருக்கிறீர்கள், பா.ஜ.க ஏற்கனவே ஒரு சதம் அடித்து உள்ளது. 

தீதியின் கட்சிக்காரர்கள்  வங்காளத்தின் எஸ்சி சமூகத்தை துஷ்பிரயோகம் செய்து பிச்சைக்காரர்கள் என்று அழைக்கிறார்கள். இத்தகைய கசப்பான வார்த்தைகளைக் கேட்டு அம்பேத்காரின்  ஆத்மா புண்படும். தீதி தன்னை 'ராயல் வங்காள புலி' என்று அழைக்கிறார். எஸ்.சி.க்கள் குறித்த இத்தகைய கருத்துக்களை எந்த திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் தீதியின் விருப்பம் இல்லாமல் பேசி இருக்க  முடியாது.

நீங்கள் விரும்பியபடி எல்லாம்  என்னை துஷ்பிரயோகம் செய்யுங்கள். ஆனால் வங்காளத்தின் கண்ணியத்தையும் பாரம்பரியத்தையும் அவமதிக்க வேண்டாம். உங்கள் ஆணவத்தையும்,  பண கலாச்சாரத்தையும், வன்முறையையும் வங்காளம் பொறுத்துக்கொள்ளாது.

​​ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்து வாக்குச் சாவடிகளில் மக்களைக் பாதுகாக்கும் மத்திய படைகளை அவமதிக்க வேண்டாம். 

இரண்டு நாட்களுக்கு முன்பு கடமையாற்ற  வங்காளத்திற்கு வந்த  துணிச்சலான போலீஸ் அதிகாரி அடித்து கொல்லப்பட்டார். அவரது தாயார் அவரது உடலைக் கண்டதும் அதிர்ச்சியில்  இறந்துவிட்டார். தீதி, அந்த அதிகாரியின் தாய் உங்களுக்கு ஒரு தாய் இல்லையா? நீங்கள் எவ்வளவு கடுமையான மற்றும் இரக்கமற்றவர் என்பதை வங்காளத்தில் உள்ள எந்த ஒரு தாய்க்கும் தெரியாது.

என கூறினார்.

Next Story