கூர்க்காக்களின் பிரச்சினைக்கு தீர்வு காணப்படும்; அமித்ஷா வாக்குறுதி


கூர்க்காக்களின் பிரச்சினைக்கு தீர்வு காணப்படும்; அமித்ஷா வாக்குறுதி
x
தினத்தந்தி 13 April 2021 9:09 PM GMT (Updated: 13 April 2021 9:09 PM GMT)

கூர்க்காக்களின் பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் என அமித்ஷா வாக்குறுதி அளித்துள்ளதால், அவர்களுக்கு தனி மாநிலம் வழங்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

மேற்கு வங்காள சட்டசபை தேர்தல்

மம்தா பானர்ஜி ஆளுகிற மேற்கு வங்காள மாநில சட்டசபைக்கு 8 கட்ட தேர்தல் அறிவிக்கப்பட்டது. வன்முறைச்சம்பவங்களுக்கு மத்தியில் அங்கு 4 கட்ட தேர்தல்கள் நடந்து முடிந்துள்ளன.5-வது கட்ட தேர்தல், 17-ந் தேதி 45 தொகுதிகளில் நடக்க உள்ளது.

அமித்ஷா வாக்குறுதி

இந்த நிலையில் அங்குள்ள டார்ஜிலிங்கில் நேற்று நடைபெற்ற பா.ஜ.க. பொதுக்கூட்டத்தில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா கலந்து கொண்டு பிரசாரம் செய்தார். அப்போது அவர் கூறியதாவது:-

நமது அரசியல் சாசனம் பரந்த அளவிலானது. அதில் எல்லா பிரச்சினைகளுக்கும் தீர்வு காண உதவும் ஏற்பாடுகள் உள்ளன.மத்தியில் ஆளுகிற, இந்த மாநிலத்தை ஆளப்போகிற இரட்டை என்ஜின் கொண்ட பா.ஜ.க. அரசுகளால் கூர்க்கா பிரச்சினைக்கு நிரந்தரமான அரசியல் தீர்வு காணப்படும் என்ற வாக்குறுதியை நான் வழங்குகிறேன். நீங்கள் இனி போராட்டங்களில் ஈடுபட வேண்டியதில்லை.கூர்க்காக்கள் இந்தியாவின் பெருமைக்கு உரியவர்கள். அவர்களுக்கு யாரும்எந்த தீங்கும் செய்து விட முடியாது.

தேசிய குடிமக்கள் பதிவேடு

தேசிய குடிமக்கள் பதிவேட்டை செயல்படுத்துவதற்கு இப்போது திட்டம் எதுவும் இல்லை. இந்த திட்டத்தை நிறைவேற்றினாலும்கூட, இதனால் கூர்க்காக்கள் பயப்படத்தேவையில்லை.டார்ஜிலிங் பகுதியைப் பொறுத்தமட்டில் அதன் வளர்ச்சிப்பணிகளுக்கு மம்தா பானர்ஜி முற்றுப்புள்ளி வைத்து விட்டார். திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்கள் ஓய்வு நேரத்தில்தான் இங்கு வருகிறார்கள்.

பா.ஜ.க.வுக்கும், கூர்க்காகளுக்கும் இடையேயான இணக்கமான உறவை அழிக்க திரிணாமுல் காங்கிரஸ் தலைமை முயற்சித்தது. இதற்காக சிலர் மீது கிரிமினல் வழக்குகளையும் போட்டது. மம்தா பலரை கொல்ல வைத்ததுடன், வழக்குகளையும் பலருக்கு எதிராக போட வைத்துள்ளார். பா.ஜ.க. ஆட்சிக்கு வந்ததும் அவர்கள் அனைவருக்கும் பொதுமன்னிப்பு வழங்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

தனி மாநிலமா?

கூர்க்காக்களின் பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் என்று அமித்ஷா வாக்குறுதி அளித்து இருப்பது கவனத்தை ஈர்ப்பதாக அமைந்துள்ளது. ஏனென்றால் மேற்கு வங்காள மாநிலத்தை இரண்டாக பிரித்து, கூர்க்காக்களுக்கு தனி மாநிலம் வேண்டும் என்பதுதான் அவர்களின் நீண்ட கால கோரிக்கையாக, பிரச்சினையாக அமைந்துள்ளது. இதற்காக பல்வேறு இயக்கங்களும் அங்கு நடத்தப்பட்டுள்ளன.

இப்போது கூர்க்காக்களின் பிரச்சினை தீர்க்கப்படும் என அமித் ஷா கூறி இருப்பது, கூர்க்காகளுக்கு தனி மாநிலம் உருவாக்கப்படுவதைத்தான் சூசகமாக குறிப்பிட்டுள்ளாரா என்ற கேள்விக்கு வழி வகுத்துள்ளது.

 


Next Story