உத்தரகாண்ட்: கும்பமேளாவில் கலந்து கொண்ட நிர்வாணி அகாரா கொரோனாவுக்கு பலி


உத்தரகாண்ட்:  கும்பமேளாவில் கலந்து கொண்ட நிர்வாணி அகாரா கொரோனாவுக்கு பலி
x
தினத்தந்தி 15 April 2021 12:03 PM GMT (Updated: 15 April 2021 12:03 PM GMT)

உத்தரகாண்டின் ஹரித்வாரில் கும்பமேளா நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நிர்வாணி அகாரா ஒருவர் கொரோனா பாதிப்புக்கு உயிரிழந்து உள்ளார்.

ஹரித்வார்,

உத்தரகாண்டில் இந்த ஆண்டுக்கான கும்பமேளா நிகழ்ச்சியில் பக்தர்கள் திரளானோர் கலந்து கொண்டுள்ளனர்.  இதன் ஒரு பகுதியாக ஹரித்வாரில் உள்ள ஹர் கி பாவ்ரி பகுதியில் கங்கை நதியில் லட்சக்கணக்கான பக்தர்கள் புனித நீராடினர்.

இதற்காக கடந்த 12ந்தேதி காலையில் பொதுமக்கள் திரளாக கூடினர்.  கடந்த மார்ச் 11ந்தேதி மகாசிவராத்திரியை முன்னிட்டு முதல் புனித நீராடும் நிகழ்ச்சி நடந்தது.  இதனை தொடர்ந்து கடந்த 14ந்தேதி பக்தர்கள் அதிகம் கூடும் 3வது புனித நீராடல் நிகழ்ச்சி நடைபெற்றது.

உத்தரகாண்டில் 1.08 லட்சத்திற்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட சூழலில், கும்பமேளா நிகழ்ச்சிக்கான ஐ.ஜி. சஞ்சய் கஞ்சியால் கூறும்பொழுது, கொரோனா விதிகளை முறையாக பின்பற்றும்படி மக்களிடம் நாங்கள் தொடர்ந்து கேட்டு கொண்டோம்.

ஆனால், மக்கள் திரளாக வந்து குவிகின்றனர்.  அதனால் அவர்கள் மீது அபராதம் விதிப்பது என்பது சாத்தியமில்லை.  சமூக இடைவெளியை உறுதிப்படுத்துவதும் கடினம்.

நாங்கள் கட்டாயப்படுத்தி அதனை செய்ய முற்பட்டால் கூட்ட நெரிசல் ஏற்பட கூடிய சூழல் உருவாகும்.  அதனால், எங்களால் சமூக இடைவெளி உத்தரவை அவர்களிடம் கட்டாயப்படுத்த முடியவில்லை என கூறினார்.

இந்த கும்பமேளா நிகழ்ச்சியில் 30 லட்சத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.  பக்தர்களை தொடர்ந்து, நிர்வாணி அகாராக்கள் (சாதுக்கள்) ஹரித்வாரில் புனித நீராடினர்.  இதற்காக அவர்களுக்கு நேரம் ஒதுக்கப்பட்டு இருந்தது.  இந்த நிகழ்ச்சியிலும், கொரோனா விதிமுறைகள் எதுவும் முறையாக பின்பற்றப்படவில்லை.  அவர்களுக்கு பாதுகாப்பு வழங்கும் பணியில் போலீசாரும் ஈடுபட்டனர்.

அவர்களில் 50 சதவீதம் பேர் இன்று வாபஸ் பெறப்பட்டு உள்ளனர்.  மற்றவர்களும் பல கட்டங்களாக திரும்ப பெறப்பட உள்ளனர்.  போலீசாருக்கு கொரோனா பரிசோதனையும் நடைபெற உள்ளது என உயரதிகாரி ஒருவர் கூறினார்.

இந்த நிலையில், கும்பமேளாவில் கலந்து கொள்வதற்காக ஹரித்வாரில் தங்கியிருந்த நிர்வாணி அகாராக்களில் ஒருவரான கபில்தேவ் என்பவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது.  இதனை தொடர்ந்து அவர் டேராடூன் நகரில் உள்ள கைலாஷ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.  எனினும் சிகிச்சை பலனின்றி அவர் இன்று உயிரிழந்து விட்டார் என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்து உள்ளது.

Next Story