தடுப்பூசி திருவிழா என்ற பெயரில் பாசாங்கு மட்டுமே நடக்கிறது; மத்திய அரசு மீது ராகுல் காந்தி குற்றச்சாட்டு


தடுப்பூசி திருவிழா என்ற பெயரில் பாசாங்கு மட்டுமே நடக்கிறது; மத்திய அரசு மீது ராகுல் காந்தி குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 15 April 2021 2:10 PM GMT (Updated: 15 April 2021 2:10 PM GMT)

தடுப்பூசி திருவிழா என்ற பெயரில் பாசாங்கு மட்டுமே நடக்கிறது என மத்திய அரசு மீது ராகுல் காந்தி குற்றம் சாட்டினார்.

கொரோனா 2-வது அலை

இந்தியாவில் கொரோனா வைரஸ் 2-வது அலை தீவிரமடைந்து வருகிறது. நாள்தோறும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு வந்த நிலையில், கடந்த 2 நாட்களாக பாதிப்பின் அளவு 2 லட்சமாக அதிகரித்துள்ளது.இதையடுத்து, 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்துவதற்காக மத்திய அரசு கடந்த 11-ந் தேதி முதல் நேற்று முன்தினம் வரை தடுப்பூசி திருவிழாவை நடத்தியது.

ஆனால், கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த முடியாமலும், தேவையான வசதிகள் இல்லாமலும் பல்வேறு மாநிலங்கள் திணறுகின்றன. படுக்கை வசதிகள், வெண்டிலேட்டர்கள், ஆக்சிஜன், தடுப்பூசி இல்லாமல் பல மாநிலங்கள் தடுமாறி வருகின்றன. மத்திய அரசின் தொகுப்பில் இருக்கும் தடுப்பூசிகளை வழங்க வேண்டும் என பல மாநில அரசுகள் கோரிக்கை விடுத்துள்ளன.

ராகுல்காந்தி கேள்வி

இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த மத்திய அரசு கையாண்டு வரும் நடவடிக்கைகள் குறித்து கடுமையாக விமர்சித்துள்ளார்.

இது குறித்து அவர் தன்னுடைய டுவிட்டர் பதிவில், “கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவமனைகளில் படுக்கை வசதியும், பரிசோதனையும் இல்லை. வெண்டிலேட்டர், ஆக்சிஜனும் இல்லை. தடுப்பூசியும் பற்றாக்குறையாக இருக்கிறது. ஆனால், தடுப்பூசி திருவிழா என்ற பெயரில் பாசாங்கு மட்டும் நடக்கிறது. மிகப்பெரிய அளவில் நன்கொடை பெறப்பட்டு உருவாக்கப்பட்ட பிரதமர் நிதி நிதியம் (பி.எம். கோர்ஸ்) என்ன ஆனது?” என கேள்வி எழுப்பியுள்ளார்.


Next Story