உத்தவ் தாக்கரேவின் மலிவான அரசியல் அதிர்ச்சி அளிக்கிறது: பியூஷ் கோயல் குற்றச்சாட்டு


உத்தவ் தாக்கரேவின் மலிவான அரசியல் அதிர்ச்சி அளிக்கிறது:  பியூஷ் கோயல் குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 17 April 2021 8:23 PM GMT (Updated: 17 April 2021 8:23 PM GMT)

மராட்டியத்துக்கு இந்த மாத இறுதிக்குள் 2 ஆயிரம் மெட்ரிக் டன் ஆக்சிஜன் நாளொன்றுக்கு தேவைப்படும் என மதிப்பிட்டு உள்ளதாக பிரதமர் மோடிக்கு மராட்டிய முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே கடிதம் எழுதியிருந்தார்.

புதுடெல்லி, 

நாடு முழுவதும் கொரோனா அதிகரித்து வரும் நிலையில், அதற்கு சிகிச்சை அளிப்பதற்கான மருத்துவ உபகரணங்களின் தேவையும் அதிகரித்து வருகிறது. அந்தவகையில் தீவிர தொற்றுக்கு ஆளாகி இருக்கும் நோயாளிகளுக்கு ஆக்சிஜன் சிலிண்டர்கள் தேவைப்படுகிறது. எனவே போதுமான அளவு மருத்துவ ஆக்சிஜன் சிலிண்டர்களை வழங்க மத்திய அரசை மாநிலங்கள் வலியுறுத்தி வருகின்றன.

அந்தவகையில் மராட்டியத்துக்கு இந்த மாத இறுதிக்குள் 2 ஆயிரம் மெட்ரிக் டன் ஆக்சிஜன் நாளொன்றுக்கு தேவைப்படும் என மதிப்பிட்டு உள்ளதாக பிரதமர் மோடிக்கு மராட்டிய முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே கடிதம் எழுதியிருந்தார். இந்த ஆக்சிஜன் சிலிண்டர்களை அண்டை மாநிலங்களில் இருந்து தருவிப்பதில் இடையூறுகள் இருப்பதால், நாட்டின் கிழக்கு மற்றும் தெற்கு பகுதிகளில் இருந்து விமானங்கள் மூலம் அவற்றை பெறுவதற்கு அனுமதிக்குமாறும் கேட்டுக்கொண்டிருந்தார்.

இந்த விவகாரத்தில் உத்தவ் தாக்கரேயை மத்திய வர்த்தகத்துறை மந்திரி பியூஷ் கோயல் குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் தளத்தில், ‘ஆக்சிஜன் விவகாரத்தில் மாநில அரசுகளின் தேவை தொடர்பாக மத்திய அரசு தினந்தோறும் பேசி வருகிறது. மராட்டிய அரசு அதிகபட்ச அளவு ஆக்சிஜனை இதுவரை பெற்றிருக்கிறது. அப்படியிருந்தும் உத்தவ் தாக்கரேயின் இந்த மலிவான அரசியல் வேதனையும், அதிர்ச்சியையும் தருகிறது’ என்று குறிப்பிட்டு உள்ளார்.

இந்த கொரோனா நெருக்கடியில் மத்திய அரசு தனது சிறந்த பணிகளை மக்களுக்கு ஆற்றி வருவதாக கூறியுள்ள பியூஷ் கோயல், ஆனால் திறமையற்ற மற்றும் ஊழல் மிக்க அரசால் மராட்டியம் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.

Next Story