எடியூரப்பாவின் பேத்தியும், அவரது கணவரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பெங்களூரு: முதல்-மந்திரி எடியூரப்பாவுக்கு நேற்று முன்தினம் கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவர் பெங்களூரு மணிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில், முதல்-மந்திரி எடியூரப்பாவை தொடர்ந்து, அவரது குடும்பத்தில் 2 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
அதாவது எடியூரப்பாவின் பேத்தி சவுந்தர்யா, அவருடைய கணவர் நிரஞ்சன் ஆகியோருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது. இதையடுத்து, எடியூரப்பா சிகிச்சை பெறும் அதே மருத்துவமனையில் சவுந்தர்யா, தனது கணவர் நிரஞ்சனுடன் சேர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.
ஹாசன் மாவட்டத்தில் கொரோனாவால் மொத்தம் 31 ஆயிரத்து 379 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 29,524 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 487 பேர் உயிரிழந்துள்ளனர். நேற்று முன்தினம் நிலவரப்படி மாவட்டத்தில் 1,368 பேர் கொரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இதில் 25 பேர் தீவிர கண்காணிப்பு பிரிவில் சிகிச்சையில் உள்ளனர். இந்த நிலையில் ஹாசன் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாச கவுடாவுக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. அவருக்கு கடந்த சில நாட்களாக காய்ச்சல், உடல் சோர்வு இருந்து வந்தது. இதைதொடர்ந்து அவர் கொரோனா பரிசோதனை செய்து கொண்டார். அந்த பரிசோதனை அறிக்கையில் அவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியானது.
இதைத்தொடர்ந்து அவர் டாக்டரின் அறிவுறுத்தலின் பேரில் வீட்டில் தன்னை தனிமைப்படுத்திக்கொண்டு, கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகிறார். போலீஸ் சூப்பிரண்டு கொேரானாவால் பாதிக்கப்பட்டுள்ளதால் சக போலீசார் கொரானா பீதியில் இருந்து வருகிறார்கள்.