

கோலார்: கோலாரில், கிராம பஞ்சாயத்து தேர்தல் முன்விரோதத்தில் விவசாயி கொலை செய்யப்பட்ட வழக்கில் அரசு விதை வளர்ச்சி வாரிய இயக்குனர் உள்பட 5 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
முன்னதாக கோஷ்டி மோதலின்போது கொலையானவரின் மகன் துப்பாக்கியால் சுட்டதில் ஒருவர் பலியானார். அதனால் அவருக்கும் ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.
முன்விரோதம்
கோலார்(மாவட்டம்) தாலுகா, வடகூர் கிராம பஞ்சாயத்து தலைவர் பதவி விவகாரம் தொடர்பாக அதே கிராமத்தை சேர்ந்த விவசாயியான தொட்டபைய்யா மற்றும் நாகராஜ் குழுவினர் இடையே கடுமையான போட்டி நிலவி வந்தது. முன்விரோதமும் ஏற்பட்டது. இந்த நிலையில் கடந்த 2006-ம் ஆண்டு ஜூலை மாதம் 20-ந் தேதி அன்று இருகோஷ்டிகள் இடையே கடும் மோதல் ஏற்பட்டது.
அதே நாளன்று கர்நாடக அரசின் விதை வளர்ச்சி வாரிய இயக்குனரான நாகராஜ், தனது ஆதரவாளர்களுடன், எதிர்கோஷ்டியை சேர்ந்த தொட்டபைய்யாவுடன் மோதலில் ஈடுபட்டார்.
படுகொலை
இதுபற்றி அறிந்த தொட்டபைய்யாவின் மகன் சோமசேகர் தனது வீட்டிற்கு வந்து தகராறு செய்தவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தினார். இதில், நாகராஜின் ஆதரவாளர்கள் ஜெயராம், லட்சுமிபதி மற்றும் நாராயணப்பா ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.
மேலும் உயிருக்கு போராடிய ஜெயராம் பரிதாபமாக பலியானார். இதற்கு பழிக்குப்பழியாக நாகராஜின் தூண்டுதலின்பேரில் அவரது ஆதரவாளர்கள், தொட்டபைய்யாவை அரிவாளால் வெட்டி படுகொலை செய்தனர்.
ஆயுள் தண்டனை
இச்சம்பவம் தொடர்பாக கோலார் புறநகர் போலீசார் இருதரப்பினர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் கோலார் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கின் விசாரணை கடந்த 15 ஆண்டுகளாக நடந்து வந்தது. விசாரணை முடிந்த நிலையில் நேற்று நீதிபதி பவனேஷ் தீர்ப்பு வழங்கினார். அவர் தொட்டபைய்யா கொலை வழக்கில் நாகராஜ் மற்றும் அவரது ஆதரவாளர்களான கோவிந்தா, முனிபைரப்பா, ரெட்டி, சோமசேகர் ஆகிய 5 பேரும் குற்றவாளிகள் என அறிவித்தார்.
அதேபோல் ஜெயராம் கொலை வழக்கில் தொட்டபைய்யாவின் மகன் சோமசேகர் குற்றவாளி என்று அறிவித்தார். பின்னர் நாகராஜ் உள்பட 6 பேருக்கு தலா ஒரு ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டார். பின்னர் நாகராஜ் உள்பட 6 பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.