இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு கடந்த 12 நாட்களில் 8%-ல் இருந்து 16.69% ஆக அதிகரிப்பு - மத்திய அரசு


இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு கடந்த 12 நாட்களில் 8%-ல் இருந்து 16.69% ஆக அதிகரிப்பு - மத்திய அரசு
x
தினத்தந்தி 18 April 2021 10:24 AM GMT (Updated: 18 April 2021 10:24 AM GMT)

இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு கடந்த 12 நாட்களில் 8%-ல் இருந்து 16.69% ஆக அதிகரித்துள்ளதாக மத்திய அரசுதெரிவித்துள்ளது.

புதுடெல்லி,

இந்தியாவில் கொரோனாவின் கொடூரம் சமீப காலமாக குறைந்து வந்தது ஆனால் தற்போது கடந்த சில வாரங்களாக புதிதாக தொற்றுக்கு ஆளாவோரின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது.  உலகளவில் கொரோனாவால் மிக மோசமாக பாதிக்கப்பட்ட இரண்டாவது நாடாக இந்தியா விளங்குகிறது.

இந்நிலையில், இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிய உச்சமாக 2,61,500 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,47,88,109 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல், தொற்று பாதிப்பால் ஒரே நாளில் 1,501 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 1,77,150 ஆக உயர்ந்துள்ளது. 

கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 1,38,423 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டநிலையில், கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,28,09,643 ஆக உயர்ந்துள்ளது. மேலும் கொரோனா தொற்றுக்கு தற்போது 18,01,316 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தியாவில் இதுவரை 12,26,22,590 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில்  இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு கடந்த 12 நாட்களில் 8%-ல் இருந்து 16.69% ஆக அதிகரித்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. மேலும் இந்தியாவில் கொரோனாவின் 2-வது அலை மக்களை உலுக்கி எடுத்து வருகிறது. முதல் அலையை விட ஆக்ரோஷமாக சுழன்றடிக்கும் இந்த 2-வது அலையால் மத்திய அரசும், மருத்துவத்துறையும் செய்வதறியாமல் திணறி வருகின்றன. 

Next Story