இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1.50 கோடியை தாண்டியது: புதிய உச்சமாக 2,73,810 பேருக்கு தொற்று உறுதி


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 19 April 2021 4:05 AM GMT (Updated: 19 April 2021 4:05 AM GMT)

இந்தியாவில் இதுவரை இல்லாத புதிய உச்சமாக ஒரேநாளில் 2,73,810 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

கொரோனா வைரஸ் இன்னும் இந்தியாவில் தன் கோர முகத்தைக்காட்டிக் கொண்டு தான் இருக்கிறது. ஒவ்வொரு நாளும் புதிய உச்சம் காண்கிற வகையில் 2 லட்சத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.  உலகளவில் கொரோனாவால் மிக மோசமாக பாதிக்கப்பட்ட இரண்டாவது நாடாக இந்தியா விளங்குகிறது.

இந்நிலையில், இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2,73,810 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,50,61,919 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல், தொற்று பாதிப்பால் ஒரே நாளில் 1,619 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 1,78,769 ஆக உயர்ந்துள்ளது. 

கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 1,44,178 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டநிலையில், கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,29,53,821 ஆக உயர்ந்துள்ளது. மேலும் கொரோனா தொற்றுக்கு தற்போது 19,29,329 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தியாவில் இதுவரை 12,38,52,566 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கொரோனா தொற்று அதிகரித்து வருகிற சூழலில் பரிசோதனைகளும் அதிகளவில் நடத்தப்படுகின்றன. விழிப்புணர்வு பிரசாரம், தடுப்பூசி திட்டம் என பல உத்திகள் வகுத்து தொற்று பரவலை தடுக்க முயற்சித்தபோதும், எதற்கும் கட்டுப்படாமல் பரவல் அதிகரித்துக்கொண்டே போகிறது. கொரோனா தொற்று பாதிப்பால் ஏற்படுகிற உயிரிழப்பும் தொடர்ந்து அதிகரிப்பது கவலைதரக்கூடிய அம்சமாக மாறி வருகிறது.


Next Story