டெல்லி: காரில் பயணிக்கும் போது முக்கவசம் அணியுமாறு கூறிய போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட தம்பதி கைது


டெல்லி: காரில் பயணிக்கும் போது முக்கவசம் அணியுமாறு கூறிய போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட தம்பதி கைது
x
தினத்தந்தி 19 April 2021 9:16 AM GMT (Updated: 19 April 2021 9:16 AM GMT)

டெல்லியில் காரில் பயணிக்கும்போது முக்கவசம் அணியுமாறு கூறிய போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட தம்பதி கைது செய்யப்பட்டுள்ளனர்.

புதுடெல்லி,

புதுடெல்லியில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதையடுத்து, டெல்லியில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. காரில் தனியாக பயணம் செய்பவராக இருந்தாலும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. டெல்லியில் இன்று இரவு 10 மணி முதல் வரும் திங்கட்கிழமை அதிகாலை 5 மணி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. 

இதற்கிடையில், டெல்லியின் டரியங்கஞ்ச் பகுதியில் போலீசார் நேற்று பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். அப்போது, அங்கு வந்த ஒரு காரை மறித்து போலீசார் சோதனை செய்தனர். 

அதில் இருந்த கணவன் மனைவியான பங்கஜ் குப்தா மற்றும் அப்ஹா குப்தா இருவரும் முகக்கவசம் அணியாமல் பயணம் செய்தது தெரியவந்தது. இதையடுத்து, அவர்களை முகக்கவசம் அணியும் படி போலீசார் வலியுறுத்தினர்.

அப்போது, போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பங்கஜ் குப்தா, நீங்கள் ஏன் என் காரை நிறுத்தினீர்கள்? எனது மனைவியுடன் எனது காரில் நான் இருக்கிறேன்’ என்று கூறினார். கணவருடன் இணைந்து மனைவி அப்ஹா குப்தாவும் போலீசார் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். ஒருகட்டத்தில் அவர் போலீசாரை மிரட்டும் வகையில் பேசினார். 

அப்ஹா குப்தா பேசுகையில், கொரோனா என்ற பெயரில் நீங்கள் என்ன நாடகம் நடத்திக்கொண்டிருக்கிறீர்கள். நான் யுபிஎஸ்சி தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளேன். எனது காருக்குள் இருக்கும்போது நான் ஏன் முகக்கவசம் அணிய வேண்டும்? நான் எனது கணவருக்கு முத்தம் கொடுக்க வேண்டுமென்றால் என்ன செய்வது?. நான் என் கணவருக்கு முத்தம் கொடுப்பேன். நீங்கள் தடுத்து நிறுத்துவீர்களோ? என்றார்.

வாக்குவாதம் முற்றியதையடுத்து, பங்கஜ் குப்தா மற்றும் அவரது மனைவி அப்ஹா குப்தாவை காவல் நிலையத்திற்கு போலீசார் அழைத்து சென்றனர். அங்கு இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு பங்கஜ் குப்தா நேற்று கைது செய்யப்பட்டார். ஆனால், அவரது மனைவி அப்ஹா குப்தாவை போலீசார் நேற்று கைது செய்யவில்லை.

இந்நிலையில், போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட அப்ஹா குப்தாவை போலீசார் இன்று கைது செய்துள்ளனர். அவர் மீதும் பல்வேறு பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட தம்பதியர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.  



Next Story