18 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி: பிரதமர் மோடிக்கு உத்தவ் தாக்கரே நன்றி


18 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி: பிரதமர் மோடிக்கு உத்தவ் தாக்கரே நன்றி
x
தினத்தந்தி 19 April 2021 9:10 PM GMT (Updated: 19 April 2021 9:10 PM GMT)

மத்திய அரசு நேற்று 18 வயதுக்கு அதிகமானவர்களுக்கு தடுப்பூசி செலுத்த அனுமதியை வழங்கி உள்ளது.

மும்பை,

மராட்டியத்தில் கொரோனா பரவல் அதிவேகமாக பரவி வருகிறது. இதனால் நோய் பாதிப்பை கட்டுப்படுத்த தடுப்பூசி போடும் பணிகள் முடுக்கி விடப்பட்டு உள்ளது. இருப்பினும் இளைய வயதினர் அதிகம் பேர் பாதிக்கப்படுவதை கருத்தில் கொண்டு 25 வயதுக்கு அதிகமான அனைவருக்கும் தடுப்பூசி போட அனுமதி அளிக்கவேண்டும் என முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே கோரிக்கை வைத்திருந்தார். இந்தநிலையில் மத்திய அரசு நேற்று 18 வயதுக்கு அதிகமானவர்களுக்கு தடுப்பூசி செலுத்த அனுமதியை வழங்கி உள்ளது.

இது குறித்து முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது:- 25 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போட அனுமதி அளிப்பது குறித்து முடிவு செய்யும்படி பிரதமர் நரேந்திர மோடியிடம் சில நாட்களுக்கு முன்பு நான் கேட்டுக்கொண்டேன். மத்திய அரசு இந்த விஷயத்தில் சாதகமான முடிவை எடுத்துள்ளது. 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போட அனுமதி கொடுத்துள்ளது.

இதற்காக நான் பிரதமர் நரேந்திர மோடிக்கும், சுகாதார துறை மந்திரிக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். மராட்டியத்தில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போட முறையான திட்டமிடல் வகுக்கப்படும். சரியான நேரத்தில் மாநிலத்திற்கு தடுப்பூசி கிடைக்கும் என்று நம்புகிறேன்’ இவ்வாறு அவர் கூறினார்.

Next Story