ரெயில் மோத வரும்போது பார்வையற்ற தாயின் குழந்தையை காப்பாற்றியது மகிழ்ச்சியாக உள்ளது ரெயில்வே ஊழியர் உருக்கம்


ரெயில் மோத வரும்போது பார்வையற்ற தாயின் குழந்தையை காப்பாற்றியது மகிழ்ச்சியாக உள்ளது ரெயில்வே ஊழியர் உருக்கம்
x
தினத்தந்தி 21 April 2021 4:47 AM GMT (Updated: 21 April 2021 4:47 AM GMT)

ரெயில் மோத வரும்போது பார்வையற்ற தாயின் குழந்தையை காப்பாற்றியது எல்லையில்லா மகிழ்ச்சியாக உள்ளது என்று ரெயில்வே ஊழியர் உருக்கமாக கூறினார்.

மும்பை, 

மும்பை அருகே வாங்கனி ரயில் நிலையத்தில் கடந்த 17-ந் தேதி மாலை நடந்த திகில் சம்பவம் இது. 2-ம் எண் நடைமேடையில் பார்வையற்ற தனது தாயுடன் 6 வயது சிறுவன் நடந்து வந்து கொண்டிருந்தான். தாயின் வலதுபுறம் தண்டவாளத்தை ஒட்டி நடந்துவந்த சிறுவன், நிலைதடுமாறி தண்டவாளத்தில் தவறி விழுந்தான். அப்போது அதே தண்டவாளத்தில் ெரயில் ஒன்று விரைந்து வந்தது.

செய்வதறியாமல் தவித்த பார்வையற்ற தாய், பிளாட்பாரத்தில் நின்றபடி மகனை தேடினார். ஆனால், சிறுவனால் பிளாட்பாரத்துக்கு ஏறி வரமுடியவில்லை. ரெயில் வருவதை உணர்ந்த தாய், மகனை காப்பாற்ற திக்கு திசை தெரியாமல் அலறினார். இந்த தருணத்தில் எதிரே ரெயில் வருவதையும் பொருட்படுத்தாமல் துணிச்சலுடன் ஓடி வந்த மயூர் ஷெல்கே என்ற ரெயில்வே ஊழியர் சிறுவனை தூக்கி பிளாட்பாரத்திற்கு ஏற்றி விட்டார். அவரும் பிளாட்பாத்தில் ஏறினார். அடுத்த நொடி ரெயில் அந்த இடத்தை கடந்தது.

இது சினிமாவை மிஞ்சும் பரபரப்பு காட்சியாக அமைந்தது. இந்த வீடியோவை பார்த்த அனைவரது மனதிலும் மயூர் ஷெல்கே நீங்கா இடம்பிடித்தார்.

இந்நிலையில், ரெயில்வே ஊழியர் மயூர் ஷெல்கேவுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. முன்னதாக மயூர் செல்கேவின் முன்மாதிரியான தைரியத்திற்கும், பணி மீதான பக்திக்கும் தலை வணங்குகிறோம் என்று இந்திய ரெயில்வே பாராட்டு தெரிவித்தது. மேலும் மத்திய ரெயில்வே மந்திரி பியூஷ் கோயல், மயூர் செல்கேவை அழைத்து பாராட்டியுள்ளார்.

அவர் செல்லும் இடமெல்லாம் அவரை ரெயில்வே ஊழியர்கள் ஆரவாரம் செய்து வரவேற்கிறார்கள்.

இதுகுறித்து மயூர் ஷெல்கே நிருபர்களிடம் கூறியதாவது:-

நான் எதிரில் வரும் உத்யான் ரெயிலுக்கு கொடி அசைப்பதற்காக காத்து கொண்டிருந்தேன். அப்போது நடைமேடையில் பார்வையற்ற தாய் எதுவும் செய்ய முடியாமல், தனது குழந்தையை காப்பாற்ற தவித்துக் கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தேன்.

சிறிதும் தாமதிக்காமல் குழந்தையை காப்பாற்ற முடிவு செய்து, குழந்தையை நோக்கி ஓடினேன். அப்போது நானும் ஆபத்தில் சிக்கலாம் என்றும் நினைத்தேன். ஆனால் என் உயிரைப் பணயம் வைத்தாவது குழந்தையை கட்டாயம் மீட்க வேண்டும் என்ற எண்ணத்தில் ஓடினேன். நல்ல வாய்ப்பாக என்னால் குழந்தையை காப்பாற்ற முடிந்தது. இந்த தருணத்தை என்னால் மறக்க முடியவில்லை. அதிலும் பார்வையற்ற தாயின் பிள்ளையை காப்பாற்றியது எல்லையில்லா மகிழ்ச்சியாக இருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Next Story