இந்தியாவில் ஒரே நாள் கொரோனா பாதிப்பு 3 லட்சத்தை தாண்டியது; 2,104 பேர் உயிரிழப்பால் மக்கள் சோகம்


இந்தியாவில் ஒரே நாள் கொரோனா பாதிப்பு 3 லட்சத்தை தாண்டியது; 2,104 பேர் உயிரிழப்பால் மக்கள் சோகம்
x
தினத்தந்தி 22 April 2021 8:16 PM GMT (Updated: 22 April 2021 8:16 PM GMT)

இந்தியாவில் ஒரே நாளில் 3.14 லட்சம் பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இது உலகளாவிய உச்சம் என பதிவாகி உள்ளது. 2,104 பேர் இந்த வைரசால் உயிரிழந்திருப்பது மக்களை சோகத்தில் ஆழ்த்தி இருக்கிறது.

கொரோனா உலகளாவிய உச்சம்
சீனாவின் உகான் நகரில் தோன்றிய கொரோனா என்ற உயிர்க்கொல்லி வைரசின் வெறியாட்டம், உலக நாடுகளை பாடாய்ப்படுத்தி வருகிறது. உலகளவில் எண்ணிக்கை அடிப்படையில் கொரோனா வைரஸ் பெருந்தொற்றின் மோசமான பாதிப்புக்கு ஆளான நாடு அமெரிக்கா.ஆனால் அந்த அமெரிக்காவை பின்னுக்கு தள்ளும் விதத்தில் கடந்த சில நாட்களாக இந்தியாவில் கொரோனா வைரஸ் பெருந்தொற்றின் இரண்டாவது அலை, மின்னல் வேகத்தில் பரவி வருகிறது.ஒவ்வொரு நாளும் 2 லட்சத்துக்கும் மேற்பட்டோரை தாக்கி வந்த இந்த கொலைகார கொரோனா வைரஸ், நேற்று காலை 8 மணியுடன் முடிந்த ஒரே நாளில் 3 லட்சத்து 14 ஆயிரத்து 835 பேரை பாதிப்புக்குள்ளாக்கி இருக்கிறது. இது உலகளாவிய உச்சம் ஆகும்.உலகின் எந்தவொரு நாட்டிலும், குறிப்பாக கொரோனாவின் கோரப்பிடியில் இன்றளவும் தத்தளித்து வருகிற அமெரிக்காவில் கூட ஒரு நாளில் ஏற்பட்டிராத பாதிப்பு என்பது அடிக்கோடிட்டு காட்டத்தக்கது.

இது சாதனையா, சோதனையா?
அந்த வகையில் இது உலக சாதனையா அல்லது உலக சோதனையா என்று கூற முடியாத நிலைக்கு நாட்டு மக்களை கவலையில் ஆழ்த்தி உள்ளது.நேற்று பாதிப்புக்குள்ளான 3 லட்சத்து 14 ஆயிரத்து 835 பேரையும் சேர்த்து இதுவரை நாட்டில் 1 கோடியே 59 லட்சத்து 30 ஆயிரத்து 965 பேரை இந்த வைரஸ், தன்பிடியில் கொண்டு வந்துள்ளது.அமெரிக்காவில் இதுவரை 3 கோடியே 18 லட்சத்து 62 ஆயிரத்து 401 பேரை இந்த வைரஸ் தாக்கி உள்ளது. அமெரிக்காவுடன் ஒப்பிடுகையில் இந்தியாவில் பாதிப்பின் மொத்த எண்ணிக்கை சரிபாதியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

10 மாநிலங்கள்
நேற்று பாதிப்புக்குள்ளான 3 லட்சத்து 14 ஆயிரத்து 835 பேரில் மராட்டியம், உத்தரபிரதேசம், டெல்லி, குஜராத், கர்நாடகம், கேரளா, சத்தீஷ்கார், மத்திய பிரதேசம், பீகார், ராஜஸ்தான் ஆகிய 10 மாநிலங்கள் மட்டுமே 75 சதவீதத்துக்கும் மேற்பட்ட பாதிப்பை பதிவு செய்துள்ளன.எண்ணிக்கை அடிப்படையில் மராட்டிய மாநிலத்தில் நேற்று அதிகபட்சமாக 67 ஆயிரத்து 468 பேர் இந்த வைரசின்பிடியில் சிக்கினர். உத்தரபிரதேசத்தில் 33 ஆயிரத்து 106 பேரும், டெல்லியில் 24 ஆயிரத்து 638 பேரும் இந்த தொற்றுக்கு நேற்று ஆளாகினர்.

2,104 பேர் பலி
நேற்று முன்தினம் 2,023 பேர் கொரோனாவுக்கு இரையாகினர். ஆனால் நேற்று இந்த எண்ணிக்கை சற்றே அதிகரித்து 2,104 ஆகி உள்ளது. இது இந்தியாவில் கொரோனா உயிரிழப்பில் புதிய உச்சம் ஆகும். உயிரிழப்புகளில் தொடர்ந்து மராட்டிய மாநிலம்தான் மோசமான நிலையில் உள்ளது. நேற்றும் அங்கு 568 பேர் கொரோனாவால் மரணத்தை தழுவி உள்ளனர். டெல்லியில் 249 பேர், சத்தீஷ்காரில் 193 பேர், உத்தரபிரதேசத்தில் 187 பேர், குஜராத்தில் 125 பேர், கர்நாடகத்தில் 116 பேர் கொரோனாவால் உயிரிழந்திருக்கிறார்கள்.அதே நேரத்தில் இந்தியாவில் கொரோனா உயிர்ப்பலி விகிதத்தை பார்த்தால் அது 
உலகின் மிகக்குறைந்த உயிர்ப்பலி விகிதங்களில் ஒன்றாக, 1.16 சதவீதமாக உள்ளது.

9 மாநிலங்கள் தப்பின
நேற்று பலியானோரில் 81.08 சதவீதத்தினர் மராட்டியம், உத்தரபிரதேசம், டெல்லி, குஜராத், கர்நாடகம், கேரளா, சத்தீஷ்கார், மத்திய பிரதேசம், பீகார், ராஜஸ்தான் ஆகிய 10 மாநிலங்களை சேர்ந்தவர்கள் ஆவார்கள்.ஆனாலும் கூட அந்தமான் நிகோபார், அருணாசலபிரதேசம், தத்ராநகர் ஹவேலி டாமன் தியு, லடாக், லட்சத்தீவு, மிசோரம், நாகலாந்து, சிக்கிம், திரிபுரா ஆகிய 9 சிறிய மாநிலங்களும், யூனியன் பிரதேசங்களும் கொரோனா உயிரிழப்பில் இருந்து தப்பி இருப்பது சற்று ஆறுதலைத்தரும் அம்சமாக அமைந்துள்ளது.

1.78 லட்சம் பேர் ‘டிஸ்சார்ஜ்’
கொரோனாவின் பிடியில் இருந்து மீள்வதற்காக நாடு முழுவதும் பல்வேறு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் 1 லட்சத்து 78 ஆயிரத்து 841 பேர் குணம் அடைந்தனர். அவர்கள் ‘டிஸ்சார்ஜ்’ செய்யப்பட்டு வீடு திரும்பினர்.அதிகபட்ச எண்ணிக்கையாக மராட்டிய மாநிலத்தில் 54 ஆயிரத்து 985 பேர் கொரோனா நோய்த்தொற்றில் இருந்து குணம் அடைந்திருக்கிறார்கள். டெல்லியில் 24 ஆயிரத்து 600 பேரும், சத்தீஷ்காரில் 17 ஆயிரத்து 264 பேரும், உத்தரபிரதேசத்தில் 14 ஆயிரத்து 198 பேரும் குணம் அடைந்து ஆஸ்பத்திரிகளில் இருந்து ‘டிஸ்சார்ஜ்’ செய்யப்பட்டனர்.இந்தியாவில் கொரோனா மீட்பு விகிதம் என்பது 84.46 சதவீதமாக உள்ளது.

23 லட்சத்தை நெருங்குகிறது
இந்தியாவில் கொரோனா மீட்பு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 23 லட்சத்தை நெருங்குகிறது. நேற்று காலை 8 மணி நிலவரப்படி 22 லட்சத்து 91 ஆயிரத்து 428 பேர் சிகிச்சையில் உள்ளனர். இது மொத்த பாதிப்பில் 14.38 சதவீதம் என மத்திய சுகாதார அமைச்சகம் சொல்கிறது. தொடர்ந்து 43-வது நாளாக இந்தியாவில் கொரோனா மீட்பு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை அதிகரித்து இருக்கிறது. இந்தியாவில் தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்கள் இரவு நேர ஊரடங்கு, பகுதி நேர ஊரடங்கு, கடுமையான போக்குவரத்து கட்டுப்பாடுகள், இன்னபிற நெறிமுறைகள் என போட்டிருந்தாலும் எதற்கும் 
கட்டுப்படாமல் கொரோனா காட்டுத்தீ போல பரவி வருவது சாமானிய மக்களை மிகுந்த பீதிக்கு ஆளாக்கி உள்ளது.தொற்று பெருகி வருகிற நிலையில், கொரோனா பரிசோதனைகளும் இந்தியாவில் அதிகரித்து வருகின்றன.நேற்று முன்தினம் ஒரே நாளில் 16 லட்சத்து 51 ஆயிரத்து 711 மாதிரிகள் சோதிக்கப்பட்டுள்ளன. இதுவரை சோதிக்கப்பட்டுள்ள மாதிரிகளின் மொத்த எண்ணிக்கை 27 கோடியே 27 லட்சத்து 5 ஆயிரத்து 103 என்ற புள்ளி விவரத்தை இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் வெளியிட்டுள்ளது.

குறைவது எப்போது?
இந்தியாவில் கொரோனா வைரஸ் பெருந்தொற்று பரவல் குறைவது எப்போது என்ற கேள்விதான் மில்லியன் டாலர் கேள்வியாக அனைவரிடமும் எதிரொலிக்கிறது.

அடுத்த மாதம் மத்தியில் இந்தியாவில் கொரோனா பரவல் உச்சத்தை அடையும் என்று பல்வேறு ஆய்வுகளின் அடிப்படையில் தலைமை பொருளாதார ஆலோசகர் கே.வி. சுப்பிரமணியன் தகவல் வெளியிட்டிருந்தார். விஞ்ஞானிகளும் இதே கணிப்பை வெளியிட்டுள்ளனர். எனவே உச்சம் தொட்ட பின்னர் கொரோனா வைரஸ் தொற்று பரவல், மே இறுதியில் இருந்து குறையத்தொடங்கும் என்ற எதிர்பார்ப்புநிலவுகிறது.

Next Story