

புதுடெல்லி,
இந்தியாவில் வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால் பல்வேறு மாநிலங்களில் ஆக்சிஜன் தட்டுப்பாடு, கொரோனா தடுப்பூசி தடுப்பாடு, ரெம்டெசிவிர் மருந்து, படுக்கை வசதிகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. தட்டுப்பாடுகளை பூர்த்தி செய்யும் நடவடிக்கையில் மத்திய, மாநில அரசுகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இதற்கிடையில், தலைநகர் டெல்லியில் கொரோனா பரவல் உச்சமடைந்து வருகிறது. அங்கு பல்வேறு மருத்துவமனைகளில் கடந்த சில நாட்களாக ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டது. பின்னர் டெல்லி உயர்நீதிமன்ற தலையீட்டை தொடர்ந்து மத்திய அரசின் நடவடிக்கையால் ஆக்சிஜன் விநியோகம் தற்போது சீராகி வருகிறது. குறிப்பாக, அரியானா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து டெல்லிக்கு வர வேண்டிய ஆக்சிஜன் டேங்கர்கள் அந்தந்த மாநில அரசுகளால் தடுத்து நிறுத்தப்பட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.
இந்நிலையில், நாட்டில் நிலவி வரும் கொரோனா பரவல் குறித்தும், வைரஸ் பரவலை கட்டுப்படுத்த எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து மாநில முதல்மந்திரிகளுடன் பிரதமர் மோடி இன்று அவரச ஆலோசனை நடத்தினார்.
இந்த ஆலோசனை கூட்டத்தில் கொரோனா அதிகம் பரவி வரும் டெல்லி, மராட்டியம், கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த முதல்மந்திரிகள் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் தமிழகம் சார்பில் தலைமை செயலாளர் ராஜீவ் ரஞ்சன் பங்கேற்றார்.
இந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற டெல்லி முதல்மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் பேசுகையில், டெல்லியில் ஆக்சிஜன் தட்டுப்பாடு மிகப்பெரிய அளவில் ஏற்பட்டுள்ளது. டெல்லியில் ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் ஆலை இல்லாவிட்டால் டெல்லி மக்களுக்கு ஆக்ஸிஜன் கிடைக்காது? டெல்லிக்கு ஒதுக்கப்பட்ட ஆக்சிஜன் டேக்கர்கள் பிற மாநிலங்களில் தடுத்து நிறுத்தப்பட்டால் மத்திய அரசில் நான் யாரை தொடர்பு கொள்ள வேண்டும் என எனக்கு தயவு செய்து பரிந்துரை சொல்லுங்கள்? என்று பிரதமர் மோடியிடம் அவர் கேள்வி எழுப்பினார்.
டெல்லிக்கு வரவேண்டிய ஆக்சிஜன் டேங்கர்கள் பிற மாநில அரசுகளால் தடுத்து நிறுத்தப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்து வரும் நிலையில் இது தொடர்பாக மத்திய அரசில் நான் யாரை தொடர்பு கொள்ள வேண்டும் என டெல்லி முதல்மந்திரி கெஜ்ரிவால் பிரதமர் மோடியிடம் கேள்வி எழுப்பிய நிகழ்வு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.