கொரோனா பாதிப்பு:பிரதமருடனான முதல் மந்திரிகள் கூட்டத்தை புறக்கணித்த மம்தா பானர்ஜி


கொரோனா பாதிப்பு:பிரதமருடனான முதல் மந்திரிகள் கூட்டத்தை புறக்கணித்த மம்தா பானர்ஜி
x
தினத்தந்தி 23 April 2021 9:52 AM GMT (Updated: 23 April 2021 9:52 AM GMT)

அதிகரித்துவரும் கொரோனா பாதிப்பு குறித்து பிரதமருடனான முதல் மந்திரிகள் ஆலோசனை கூட்டத்தை மம்தா பானர்ஜி புறக்கணித்தார்.

புதுடெல்லி:

இந்தியாவில் கொரோனாவின் 2-வது அலை அதிதீவிரமடைந்துள்ளது. இந்தியாவில் புதிய உச்சமாக கடந்த 24 மணி நேரத்தில் 3 லட்சத்து 32 ஆயிரத்து 730 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இதனால் நாட்டில் கொரோனா பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 1 கோடியே 62 லட்சத்து 63 ஆயிரத்து 695 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் உறுதி செய்யப்பட்டவர்களில் 24 லட்சத்து 28 ஆயிரத்து 616 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

வைரஸ் பாதிப்பில் இருந்து கடந்த 24 மணி நேரத்தில் 1 லட்சத்து 93 ஆயிரத்து 279 பேர் குணமடைந்துள்ளனர். இதனால், இந்தியாவில் குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 1 கோடியே 36 லட்சத்து 48 ஆயிரத்து 159 ஆக அதிகரித்துள்ளது.

ஆனாலும், வைரஸ் தாக்குதலுக்கு புதிய உச்சமாக கடந்த 24 மணி நேரத்தில் 2 ஆயிரத்து 263 பேர் உயிரந்துள்ளனர். இதனால், இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1 லட்சத்து 86 ஆயிரத்து 920 ஆக அதிகரித்துள்ளது. நாடு முழுவதும் இதுவரை 13 கோடியே 54 லட்சத்து 78 ஆயிரத்து 420 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால் பல்வேறு மாநிலங்களில் ஆக்சிஜன் தட்டுப்பாடு, கொரோனா தடுப்பூசி தடுப்பாடு, ரெம்டெசிவிர் மருந்து, படுக்கை வசதிகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. தட்டுப்பாடுகளை பூர்த்தி செய்யும் நடவடிக்கையில் மத்திய, மாநில அரசுகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், நாட்டில் நிலவி வரும் கொரோனா பரவல் நிலவரம், தடுப்பூசி செலுத்தும் பணிகள், படுக்கை வசதிகள், ஆக்சிஜன் வசதியை ஏற்படுத்தல் உள்ளிட்ட கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மாநில முதல்மந்திரிகளுடன் பிரதமர் மோடி தற்போது அவரச ஆலோசனை நடத்தினார்.

கூட்டத்தில்  மராட்டியம்,  உத்தரபிரதேசம், கேரளா, சத்தீஸ்கார், மத்தியப் பிரதேசம்  மாநில முதலமைச்சர்களும் அடங்குவர்.

ஆனால் மேற்குவங்காள  முதல்வர் மம்தா பானர்ஜி பிரதமர் நரேந்திர மோடியுடன் முதல்வர்கள் சந்திப்பை தவிர்த்துவிட்டார் என்று வட்டாரங்கள் தெரிவித்தன.

தற்போது நடைபெற்று வரும் சட்டமன்றத் தேர்தலுக்கான பிரச்சாரத்தில் மும்முரமாக இருந்ததால் பானர்ஜி முன்பு இதே போன்ற சில கூட்டங்களைத் தவிர்த்து வந்தார்.

இதற்கிடையில், மாநிலத்தின் கொரோனா  நிலைமையை மேற்பார்வையிடும் ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் பார்வையாளர்களின் நடவடிக்கைகளை மேற்பார்வையிட மேற்கு வங்க அரசு பாண்டியோபாத்யாயின் கீழ் ஆறு பேர் கொண்ட உச்ச பணிக்குழுவை அமைத்துள்ளது என்று ஒரு அதிகாரி தெரிவித்தார்.

Next Story