கர்நாடகத்தில் 57 மணி நேர முழு ஊரடங்கு அமலுக்கு வந்தது

கர்நாடகத்தில் 57 மணி நேர முழு ஊரடங்கு அமலுக்கு வந்தது. போக்குவரத்து உள்பட அனைத்து சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. அதே நேரத்தில் காய்கறி, இறைச்சி கடைகளை காலை 10 மணி வரை திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும் போக்குவரத்து உள்பட அனைத்து சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
கர்நாடகத்தில் 57 மணி நேர முழு ஊரடங்கு அமலுக்கு வந்தது
Published on

பெங்களூரு:

முழு ஊரடங்கு

கர்நாடகத்தில் கொரோனா அதிவேகமாக பரவி வருகிறது. தலைநகர் பெங்களுருவில் வைரஸ் பரவல் அதிகமாக உள்ளது. வைரஸ் பரவலை கட்டுப்படுத்த கர்நாடகத்தில் 14 நாட்களுக்கு 90 சதவீத ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அத்தியாவசிய சேவைகள், மருந்தகங்கள், கட்டுமான பணிக்கு தேவையான பொருட்களை விற்பனை செய்யும் கடைகள், உணவகங்கள், இறைச்சி கடைகள் தவிர பிற வணிக நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன.

அத்துடன் வார இறுதி நாட்களான சனி, ஞாயிறு ஆகிய 2 நாட்கள் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று அரசு கடந்த அறிவித்தது. அதன்படி கர்நாடகத்தில் 57 மணி நேர ஊரடங்கு நேற்று இரவு 9 மணிக்கு தொடங்கியது. இந்த ஊரடங்கின்போது அத்தியாவசிய பொருட்களை விற்பனை செய்யும் கடைகள், மருந்தகங்கள், இறைச்சி கடைகளுக்கு மட்டுமே அனுமதி உண்டு. மற்ற அனைத்து வணிக நிறுவனங்களும் மூடப்பட வேண்டும். கட்டிட பணிகள் மற்றும் கட்டிட பணிகளுக்கான பொருட்களை விற்பனை செய்யம் கடைகளையும் மூட வேண்டும்.

பஸ் போக்குவரத்து உள்பட அனைத்து வகையான போக்குவரத்துக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் மருத்துவ பணியாளர்கள், கொரோனா தடுப்பு பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்களின் வசதிக்காக பெங்களூருவில் சுமார் 50 பஸ்கள் மட்டும் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதே போல் புறநகர் பஸ்களும் குறைந்த எண்ணிக்கையில் இயக்கப்பட உள்ளன. பொதுமக்கள் வெளியில் நடமாட அனுமதி கிடையாது. வாகனங்களில் வெளியே சுற்றினால் அந்த வாகனங்களை பறிமுதல் செய்து அபராதம் விதிக்க போலீசார் தயாராகியுள்ளனர். தனியார் நிறுவனங்கள் இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதில் பணியாற்றும் ஊழியர்கள் நிறுவனங்களின் அடையாள அட்டையை காண்பித்து பணிக்கு செல்ல எந்த தடையும் இல்லை.

கண்காணிப்பு பணிகள்

முழு ஊரடங்கை மிக கடுயைமாக அமல்படுத்த வேண்டும் என்று போலீஸ் அதிகாரிகளுக்கு மந்திரி பசவராஜ் பொம்மை உத்தரவிட்டுள்ளார். இதனால் தலைநகர் பெங்களூருவில் இன்று (சனிக்கிழமை) போலீசார் பிரதான சாலைகளில் ரோந்து வந்து கண்காணிப்பு பணிகளில் ஈடுபட உள்ளனர். 250-க்கும் மேற்பட்ட சந்திப்புகளில் போலீஸ் கண்காணிப்பு குடில்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த 57 மணி நேர முழு ஊரடங்கு 26-ந் தேதி காலை 6 மணிக்கு நிறைவடைகிறது. அதனால் வெளியூர் செல்ல திட்டமிட்டு இருப்பவர்கள் அவற்றை ஒத்திவைப்பது நல்லது. கடைகளுக்கு சென்று அத்தியாவசிய பொருட்களை வாங்க விரும்புவோர் சற்று எச்சரிக்கையுடன் இருக்க வேண்டியது அவசியம். தலைநகர் பெங்களூருவில் போலீசார் பெரும்பாலான மேம்பாலங்களை இரும்பு தடுப்புகளை வைத்து மூடியுள்ளனர்.

கொரோனா தடுப்பு

ஆம்புலன்ஸ் மற்றும் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் வாகனங்கள் செல்ல வாய்ப்பு ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளது. போலீசார் அதிக எண்ணிக்கையில் ரோந்து பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கர்நாடகத்தில் ஏற்கனவே 90 சதவீத ஊரடங்கு அமலில் உள்ளதால், பெங்களூருவில் நேற்று சாலைகளில் வாகன போக்குவரத்து குறைவாக இருந்தது. பெரும்பாலான வணிக நிறுவனங்கள் மூடப்பட்டிருந்தன.

இதனால் எப்போதும் பரபரப்பாக காணப்படும் கமர்ஷியல் தெரு, அவென்யூரு ரோடு, சிக்பேட்டை வர்த்தக பகுதிகளில் ஆள் நடமாட்டம் மிக குறைவாக இருந்தது. இதனால் பி.எம்.டி.சி. பஸ்களில் பயணிகளின் எண்ணிக்கையும் குறைவாக இருந்தது. வருகிற 4-ந் தேதி வரை இதே நிலை தான் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து வருவாய்த்துறை மந்திரி ஆர்.அசோக் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

விமான நிலையம்

முழு ஊரடங்கின்போது பஸ் போக்குவரத்து இருக்காது. மருத்துவ சேவையில் ஈடுபடும் ஊழியர்களுக்காக குறைந்த எண்ணிக்கையில் பஸ்கள் இயக்கப்படும். காய்கறி கடைகள், இறைச்சி கடைகள், பழக்கடைகள், பலசரக்கு கடைகள் காலை 6 மணி முதல் காலை 10 மணி வரை மட்டுமே திறக்க அனுமதி உண்டு. அதன் பிறகு அந்த கடைகளையும் மூட வேண்டும். விமான நிலையங்களுக்கு செல்பவர்கள் டிக்கெட் வைத்துக் கொண்டு வாடகை கார்களில் செல்லலாம்.

ஏற்கனவே முடிவு செய்யப்பட்ட திருமணங்களை நடத்தலாம். ஆனால் அதில் 50 பேர் மட்டுமே பங்கேற்க வேண்டும். துக்க நிகழ்ச்சிகளில் 20 பேர் கலந்து கொள்ளலாம். தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்கள் அடையாள அட்டையை காண்பித்து பணிக்கு செல்லலாம். தடுப்பூசி போட்டுக் கொள்பவர்கள், ஆஸ்பத்திரிக்கு செல்லும் நோயாளிகளுக்கு தடை இல்லை.

எந்த தடையும் இல்லை

அவர்கள் உரிய அடையாள அட்டையை காட்ட வேண்டும். நேயாளியுடன் ஒருவர் செல்ல அனுமதி உண்டு. முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் தீவிரமாக அமல்படுத்தப்படும். இதற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். டாக்டர்கள், செவிலியர்கள் உள்பட மருத்துவ பணியாளர்கள் நடமாட எந்த தடையும் இல்லை.

தொலைத்தொடர்பு நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்கள் அடையாள அட்டையை காட்டி பணிக்கு செல்லலாம். கட்டுமான பணிகளுக்கு அனுமதி கிடையாது. வாரத்தில் 5 நாட்கள் மட்டுமே அந்த பணிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பரவலை தடுப்பது குறித்து சித்தராமையா, குமாரசாமி கூறியுள்ள ஆலோசனைகளை நாங்கள் ஏற்கிறோம்.

இவ்வாறு ஆர்.அசோக் கூறினார்.

மெட்ரோ ரெயில்கள் ரத்து

முழு ஊரடங்கை முன்னிட்டு பெங்களூருவில் மெட்ரோ ரெயில் போக்குவரத்து சேவை இன்றும் (சனிக்கிழமை), நாளையும் (ஞாயிற்றுக்கிழமை) ரத்து செய்யப்படுவதாக மெட்ரோ ரெயில் கழக நிர்வாகம் அறிவித்துள்ளது. நேற்று இரவு 7.30 மணியுடன் ரெயில் சேவை நிறுத்தப்பட்டுவிட்டது.

மீண்டும் வருகிற 26-ந் தேதி காலை 7 மணிக்கு ரெயில் சேவை தொடங்கும். ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலில் இருக்கும் வரை வாரத்தில் திங்கட்கிழமை காலை 7 மணிக்கு ரெயில் சேவை தொடங்கி வெள்ளிக்கிழமை இரவு 7.30 மணிக்கு நிறைவு செய்யப்படும் என்று மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com