இது கொரோனாவின் 2-வது அலை அல்ல... இது சுனாமி - டெல்லி ஐகோர்ட் கருத்து

கொரோனாவின் 2-வது அலையின் உச்சத்தை கட்டுப்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன? என்று மத்திய அரசுக்கு டெல்லி ஐகோர்ட் கேள்வி எழுப்பியுள்ளது.
இது கொரோனாவின் 2-வது அலை அல்ல... இது சுனாமி - டெல்லி ஐகோர்ட் கருத்து
Published on

புதுடெல்லி,

தலைநகர் டெல்லியில் கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. வைரஸ் பரவல் அதிகரித்து வரும் நிலையில் டெல்லியில் பல்வேறு மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டு வருகிறது. ஆக்சிஜன் தட்டுப்பாடு காரணமாக பல கொரோனா நோயாளிகள் உயிரிழந்து வருகின்றனர்.

மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு வரும் தங்கள் குடும்பத்தினர், உறவினர்கள் கொரோனாவால் உயிரிழந்து வருவதால் பொதுமக்களில் பலர் மருத்துவமனை ஊழியர்கள் மீது கோபம் அடைந்து அவர்களை தாக்கும் தவறான செயல்களும் ஒருசில இடங்களில் நடைபெற்று வருகிறது.

இதற்கிடையில், கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் மருத்துவமனையில் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படலாம். அதனை கருத்தில் கொண்டு மருத்துவமனைக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கும்படி டெல்லி ஐகோர்ட்டில் தனியார் மருத்துவமனை சார்பில் வழக்குத்தொடரப்பட்டது.

அந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, 'நெருங்கிய மற்றும் அன்பானவர்களுக்கு பாதிப்பு (உயிரிழப்பு) ஏற்படும்போது மக்கள் எவ்வாறு நடந்துகொள்வார்கள் என்பது யாருக்கும் தெரியாது என கருத்து தெரிவித்த நீதிபதிகள் டெல்லியில் உள்ள அனைத்து மருத்துவமனைகளிலும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உத்தரவிட்டனர்.

மேலும், கொரோனா வைரசின் இரண்டாவது அலை குறித்து கருத்து தெரிவித்த நீதிபதிகள், இது கொரோனாவின் 2-வது அலை அல்ல... இது சுனாமி என கூறினர். நாம் இன்னும் கொரோனாவின் இரண்டாவது அலையின் உச்சத்தை இன்னும் தொடவில்லை. அது (அடுத்த மாதம்) மே மாதம் மையப்பகுதியில் ஏற்படலாம் என நாம் எதிர்பார்க்கிறோம். அதை எதிர்கொள்ள நாம் எப்படி தயாராக உள்ளோம் என்று மத்திய அரசிடம் டெல்லி ஐகோர்ட் கேள்வி எழுப்பியது.

இதற்கு பதிலளித்த மத்திய அரசு தரப்பு வழக்கறிஞர், அடுத்து வரும் வாரங்களில் கொரோனா பரவல் அதிவேகமாக இருக்கும். இது பதற்றத்தை ஏற்படுத்துவதற்காக கூறவில்லை. ஆனால், மிகவும் மோசமான சூழ்நிலைக்கு நாம் தயாராக இருக்க வேண்டும் என்றார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com