சிங்கப்பூரில் இருந்து கிரையோஜெனிக் கன்டெய்னர்கள் விமானப்படை விமானம் மூலம் இந்தியா வந்தன


சிங்கப்பூரில் இருந்து கிரையோஜெனிக் கன்டெய்னர்கள் விமானப்படை விமானம் மூலம் இந்தியா வந்தன
x
தினத்தந்தி 24 April 2021 11:57 PM GMT (Updated: 24 April 2021 11:57 PM GMT)

ஆக்சிஜன் விநியோகத்த அதிகரிக்க உதவும் வகையில் சிங்கப்பூரில் இருந்து 4 கிரையோஜெனிக் கன்டெய்னர்கள் இந்தியாவிற்கு கொண்டு வரப்பட்டுள்ளன.

புதுடெல்லி,

கொரோனா வைரஸ் தொற்று பரவலால் நாட்டின் ஆக்சிஜன் தேவை பெருகி வருகிறது. ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் டெல்லி உள்ளிட்ட வட மாநிலங்களில் நோயாளிகள் மரணத்தை தழுவுகிற துயரங்கள் நேர்கின்றன. ஆக்சிஜன் தட்டுப்பாட்டை போக்க பல நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.

அந்த வகையில், காலியான ஆக்சிஜன் டேங்கர்கள் கடந்த வெள்ளிக்கிழமை முதல் விமானப்படை விமானம் மூலம் ஆக்சிஜன் நிரப்பும் நிலையங்களுக்கு எடுத்துச்செல்லப்படுகின்றன. இந்த நிலையில் சிங்கப்பூரின் சாங்கி விமான நிலையத்தில் இருந்து இந்திய விமானப்படையின் சி-17 விமானம் மூலம் மிகப்பெரிய அளவிலான 4 கிரையோஜெனிக் கன்டெய்னர்கள் நேற்று இந்தியா வந்து சேர்ந்தன. இவை மேற்கு வங்காளத்தில் உள்ள பனாகாருக்கு (மேற்கு வங்காளம்) ஆக்சிஜன் நிரப்புவதற்காக மாலை 4.30 மணிக்கு கொண்டு வரப்பட்டுள்ளன.

இதன்மூலம் ஆக்சிஜன் வினியோகம் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது. ஏற்கனவே அத்தியாவசிய மருந்துகளையும், மருத்துவ சாதனங்களைளயும் விமானப்படை விமானங்கள் நாட்டின் பல்வேறு இடங்களிலும் உள்ள கொரோனா ஆஸ்பத்திரிகளுக்கு எடுத்துச்செல்வது குறிப்பிடத்தக்கது.

Next Story