மராட்டியத்தில் அரங்கேறிய அவலம்; 22 உடல்களை ஒரே ஆம்புலன்சில் திணித்து எடுத்துச்சென்றனர் - கொரோனாவால் பலியானவர்கள்


மராட்டியத்தில் அரங்கேறிய அவலம்; 22 உடல்களை ஒரே ஆம்புலன்சில் திணித்து எடுத்துச்சென்றனர் - கொரோனாவால் பலியானவர்கள்
x
தினத்தந்தி 28 April 2021 1:12 AM GMT (Updated: 28 April 2021 1:12 AM GMT)

மராட்டிய மாநிலத்தில் கொரோனாவால் பலியான 22 பேரின் உடல்களை ஒரே ஆம்புலன்சில் திணித்து மயானத்துக்கு எடுத்துச் சென்றது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.

அவுரங்காபாத்,

மராட்டிய மாநிலம் பீத் மாவட்டத்தில் உள்ள அம்பாஜோகை நகரில் சுவாமி ராமானந்த தீர்த்தர் அரசு ஊரக மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரி உள்ளது. இங்குள்ள பிணவறையில், கொரோனாவால் இறந்தவர்கள் உள்ளிட்டோரின் உடல்கள் வைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் இங்கிருந்து, கொரோனாவால் இறந்த 22 பேரின் உடல்கள் நேற்று முன்தினம் ஒரே ஆம்புலன்சில் திணித்து மயானத்துக்குஎடுத்துச் செல்லப்பட்டன. இது பற்றிய தகவல் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.

இதுகுறித்து மருத்துவ கல்லூரி டீன் டாக்டர் சிவாஜி சுக்ரே கூறுகையில், ஆஸ்பத்திரியில் போதுமான ஆம்புலன்ஸ்கள் இல்லாததாலேயே இந்நிலை ஏற்பட்டது.

கடந்த ஆண்டு கொரோனா முதலாவது அலையின்போது ஆஸ்பத்திரியில் 5 ஆம்புலன்ஸ் கள் இருந்தன. அவற்றில் 3 ஆம்புலன்ஸ்கள் திரும்பப்பெறப்பட்டுவிட்டதால், 2 ஆம்புலன்ஸ்களை கொண்டு சமாளிக்க வேண்டியுள்ளது என்றார்.

3 ஆம்புலன்ஸ்களை வழங்கும்படி மாவட்ட நிர்வாகத்துக்கும், இறந்த கொரோனா நோயாளிகளின் உடலை வார்டில் இருந்து நேரடியாக மயானத்துக்கு அனுப்பிவிடுகிறோம், அவற்றை காலை 8 மணி முதல் இரவு 10 மணி வரை தகனம் செய்யும்படி நகராட்சி நிர்வாகத்துக்கும் ஏற்கனவே கடிதம் எழுதியிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

இதற்கிடையில், ஆஸ்பத்திரி நிர்வாகமும், உள்ளூராட்சி அமைப்பும் ஒருவர் மீது ஒருவர் பழிபோட்டு தப்பிக்க முயல்வதாக பா.ஜ.க. எம்.எல்.சி. சுரேஷ் தாஸ் குற்றம்சாட்டியிருக்கிறார்.

இந்நிலையில் நகராட்சி தலைவர் ராஜ்கிஷோர், மருத்துவ கல்லூரிக்கு தாங்கள் ஒரு ஆம்புலன்ஸ் வழங்கப்போவதாகவும், மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் மேலும் 2 ஆம்புலன்ஸ்கள் வழங்கப்படும் என்றும் தெரிவித்திருக்கிறார்.

Next Story