2 இடங்களில் போட்டியிட்ட ரங்கசாமி ஏனாம் தொகுதியில் தோல்வி; தட்டாஞ்சாவடியில் அமோக வெற்றி


2 இடங்களில் போட்டியிட்ட ரங்கசாமி ஏனாம் தொகுதியில் தோல்வி; தட்டாஞ்சாவடியில் அமோக வெற்றி
x
தினத்தந்தி 3 May 2021 4:56 AM IST (Updated: 3 May 2021 4:56 AM IST)
t-max-icont-min-icon

2 இடங்களில் போட்டியிட்ட ரங்கசாமி ஏனாம் தொகுதியில் தோல்வி அடைந்தார். மற்றொரு தொகுதியான தட்டாஞ்சாவடி தொகுதியில் அமோக வெற்றி பெற்றார்.

2 தொகுதிகளில் போட்டி

புதுவை மாநிலத்தை பொறுத்தவரை முக்கிய தலைவர்கள் பெரும்பாலும் தொகுதி மாறி போட்டியிடுவதில்லை. ஆனால் இந்த தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ் தலைவரான ரங்கசாமி தட்டாஞ்சாவடி, புதுவை பிராந்தியத்தின் மற்றொரு தொகுதியான ஏனாம் ஆகிய 2 தொகுதிகளில் போட்டியிட்டார்.

ஏற்கனவே வெற்றிபெற்ற ஒருங்கிணைந்த தட்டாஞ்சாவடி தொகுதியான தட்டாஞ்சாவடி, இந்திராநகர், கதிர்காமம் ஆகிய 3 தொகுதிகளிலும் இதற்கு முன் நடந்த தேர்தல்களில் போட்டியிட்டு ரங்கசாமி வெற்றிபெற்றுள்ளார்.

தோல்வி

நேற்று வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டதில் எதிர்பாராதவிதமாக ஏனாம் தொகுதியில் ரங்கசாமி வெற்றி வாய்ப்பை இழந்தார். அங்கு சுயேச்சை வேட்பாளர் கோலப்பள்ளி ஸ்ரீனிவாஸ் அசோக் வெற்றி பெற்றார். அவர் மொத்தம் 16 ஆயிரத்து 874 வாக்குகள் பெற்று இருந்தார்.

ரங்கசாமிக்கு 16 ஆயிரத்து 228 வாக்குகள் கிடைத்து இருந்தது. 648 வாக்குகள் வித்தியாசத்தில் ரங்கசாமி தோல்வியை சந்தித்துள்ளார். ஆனால் தட்டாஞ்சாவடி தொகுதியில் ரங்கசாமிக்கு அமோக வெற்றி கிடைத்தது.

ஏற்கனவே கடந்த 2000-ம் ஆண்டில் நடந்த இடைத்தேர்தலின்போது முதல்-அமைச்சராக இருந்த சண்முகம் ஏனாமில் போட்டியிட்டு வெற்றிபெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story