மேற்குவங்காள முதல்மந்திரி பதவியை ராஜினாமா செய்தார் மம்தா பானர்ஜி
மேற்குவங்கள முதல்மந்திரி பதவியை மம்தா பானர்ஜி இன்று ராஜினாமா செய்தார். அதற்கான ராஜினாமா கடிதத்தை கவர்னரிடம் அவர் வழங்கினார்.
கொல்கத்தா,
மேற்குவங்காளத்தில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சியை தக்கவைத்துள்ளது. நடந்து முடிந்த மேற்குவங்காள தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் 213 தொகுதிகளை கைப்பற்றியது. பாஜக 77 தொகுதிகளை மட்டுமே கைப்பற்றி தோல்வியடைந்தது. சிபிம் கூட்டணி 1 தொகுதியையும், மற்றவை 1 தொகுதியையும் கைப்பற்றியுள்ளது.
ஆட்சியை தக்க வைத்துள்ள மம்தா பானர்ஜி 3-வது முறையாக மேற்குவங்காள முதல்மந்திரி பதவியேற்க உள்ளார். மம்தா பானர்ஜியின் பதவியேற்பு விழா மே 5-ம் தேதி (நாளை மறுதினம்) எந்தவித ஆடம்பரமின்றி எளிமையான முறையில் நடைபெற உள்ளது.
இந்நிலையில், மேற்குவங்காள முதல்மந்திரியாக செயல்பட்டு வந்த மம்தா பானர்ஜி இன்று தனது பதவியை ராஜினாமா செய்தார். மாநில கவர்னர் ஜக்தீப் தங்கரை நேரில் சந்தித்த மம்தா பானர்ஜி தனது ராஜினாமா கடிதத்தை வழங்கினார். மம்தா பானர்ஜியின் ராஜினாமா கடிதத்தை கவர்னர் ஏற்றுக்கொண்டார்.
முதல்மந்திரி பதவியை ராஜினாமா செய்துள்ள போதும் நாளை மறுதினம் மீண்டும் மேற்குவங்காள முதல்மந்திரியாக பதவியேற்க உள்ளதால் இடைப்பட்ட காலத்திலும் முதல்மந்திரி பதவியிலேயே தொடர்ந்து பணிகளை மேற்கொள்ள அனுமதிக்கும்படி கவர்னரிடம் மம்தா பானர்ஜி கோரிக்கை விடுத்துள்ளார். அந்த கோரிக்கை ஏற்கப்பட்டதாக கவர்னர் மாளிகை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Related Tags :
Next Story